Friday, August 20, 2010

எது வெற்றி? எது தோல்வி?



எது வெற்றி? எது தோல்வி?

நினைத்ததை அடைந்தால் வெற்றி.... அடைய முடியாவிட்டால் தோல்வி.



முதலில் புரிந்துகொள்ள வேண்டியது “தோல்வி என்பது நாம் செய்த செயல்கள் சரியில்லை” என்பதை அறிவுறுத்த வந்த நிகழ்வு. இதில் நான் தோற்கவில்லை. நான் செய்த செயல்கள் சரியில்லை என்பதுதான் நிகழ்வு.

எனவே, நம் வாழ்க்கை அகராதியில், ‘நான் தோற்றுவிட்டேன்’ என்றசொல்லைத் தூக்கிக் கடலில் போட்டு விடுவோம்.

குழந்தை நடக்க முயற்சி செய்யும்பொழுது பலமுறை விழுந்து எழுந்துதான் நடக்கக் கற்றுக்கொள்கிறது. எந்தக் குழந்தையாவது ‘நான் நடக்க முயற்றிக்கும் பொழுது 50 முறை விழுந்து விட்டேன். எனவே நடப்பது எனக்கு ஒத்துவராத விஷயம்” என முடிவெடுத்திருக்கிறதா? ‘50 முறை என்ன, 500 முறை விழுந்தாலும் எழுந்து நடந்தே தீருவேன்’ என்ற உற்சாகம் Motivation enthusiasm இருப்பதால் குழந்தை புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வமாய் உள்ளது. தன்னுடைய 5 வயதிற்குள் குழந்தை கிட்டத்தட்ட 93 திறமைகளை வளர்த்துக்கொள்கிறது.

தோல்விக்குக் காரணங்களை ஆய்க

ஒவ்வொரு முறையும் மனிதர்கள் தோல்வியடையும்போது விஞ்ஞானப் பூர்வமாகக் காரண காரியங்களை ஆராய வேண்டும். தோல்விக்குக் காரணம் என்ன? எதில் குறை? என்ன குறை? என்பதைத் தீர்க்கமாகப் பார்க்க வேண்டும்.

அதாவது குறை, தொழில் அறிவிலா? அணுகுமுறையிலா? திறமையிலா? அல்லது எனக்கு வியாபார – விற்பனை உத்திகள் சரியாகத் தெரியவில்லையா? போட்டியா உலக நிலவரம் தெரியவில்லையா? தரமா? விலையா? வாடிக்கையாளர் சேவை போதவில்லையா? தொடர்ச்சியான வளர்ச்சி இல்லையா? கணக்கு களில் சரியில்லையா? தொழில் ஈடுபாடு அல்லது அக்கறையில்லையா? நன்கு கவனிக்கவில்லையா?

இப்படிப் பல கோணங்களில் விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். முன் அனுபவம் உள்ளவர்களிடமும் ஆலோசகர் களிடமும் ஆலோசனை பெற வேண்டும். குறை களைக் கண்டுபிடித்துச் சரி செய்து, மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்.

தோல்விக்கு பின் வரும் வெற்றி தரும் நன்மைகள்

இந்த மனித வாழ்க்கைச் சரித்திரத்தில் வெற்றியால் பெற்ற அறிவைவிட, தோல்வியால் பெற்றஅறிவும், விழிப்புணர்வும் அதிகம். எப்படி ஒரு மருத்துவர் உடலில் உள்ள கட்டியை நீக்கி னால், நமக்கு வலி ஏற்படுகிறது. ஆனால், அதன் பலனாக நன்மை கிடைக்கிறது. அதேபோலக் கருணைமிக்க பிரபஞ்ச சக்தி தோல்வியைக் கொடுத்தால் அதனாலும் ஒரு நம்மை கிடைக்கிறது. நாம் மனப்பக்குவம் பெறுகிறோம்.


வெயிலிலிருந்து நிழலுக்குப் போனால் சுகம். இருளிலிருந்து ஒளிக்குப் போனால் சுகம். இப்படித் தோல்வியடைந்து – சங்கடமடைந்து வெற்றிபெற்றால் அதனுடைய சந்தோஷமே தனி தான்.

ஆகவே, நண்பர்களே! தோல்விகளைக் கடந்து அந்தச் சாதனைச் சந்தோஷத்தை அடைவோம். அதுவே நமக்குப் பேரானந்தம்.

தோல்வியானால்… அதனால் என்ன?

எது நடந்தாலும் இன்று முதல் ஒரு கேள்வியைக் கேளுங்கள். அந்தக் கேள்வி அதனால் என்ன? (So What?)

அதாவது அந்தத் தோல்வியால் ஏற்படுகின்ற பாதிப்புகளை நினைத்து அதனால் என்ன? எதுவும் வரட்டும். அதன் விளைவுகள் எதுவாக இருந்தாலும் நான் சந்திப்பேன்’ என்று உறுதியாக நில்லுங்கள். ‘அதைத் தாங்கிக்கொள்ள நான் தயார்’ என்றமன உறுதியுடன் இருப்பவர்களும் எந்தச் சங்கடங்களும், தோல்விகளும், பிரச்சனைகளும் எந்தத் தீங்கினையும் செய்ய முடியாது.

அதாவது, “மாற்ற முடிந்தவற்றை மாற்றுவோம். மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்வோம்”. “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே?” என்று எதையும் எதிர்கொள்வோர்க்கு இந்த உலகில் எதுவும் பிரச்சனை இல்லை.


No comments:

Post a Comment