Sunday, December 26, 2010

அர்த்தமுள்ள இந்துமதம் I - 20


20. குட்டித் தேவதைகள்

இந்து மதத்தின் பேரால் தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் ஏராளமான சிறு தேவதைக்கோயில்கள் இருக்கின்றன.

இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இத்தகைய கோவில்கள் இருந்தாலும், தமிழகத்தில் உள்ளதுபோல் எல்லாக் கிராமங்களிலும் இருக்கவில்லை.
ரோமானிய நாகரிகத்திலும் ஒரு காலத்தில் இத்தகைய சிறு தேவதை நம்பிக்கை இருந்தது.
மழைத்தேவதை, காதல் தேவதை என்று பல தேவதைகள் வணங்கப்பட்டன.
அந்தக் காலத்தில் கிறிஸ்தவர்களிடையேயும் இந்த நம்பிக்கை இருந்ததாகத் தெரிகிறது.
கிரேக்க நாகரிகத்தில் இத்தகைய தேவதைகள் வணக்கம் பெருமளவில் இருந்தது.
ஆனால், அவையனைத்தும் மூல தெய்வத்தின் கிளைகளாகவும், தூதுவர்களாகவுமே வருணிக்கப்பட்டிருந்தன.
‘ஊருக்கொரு தேவதை’ என்ற நிலையில், இந்து சமயத்தைத் தவிர , வேறு எந்தச் சமயமும் சிறுதேவதை நம்பிக்கை கொண்டதில்லை.
இந்தச்சிறு தேவதைகள் எப்படித் தோன்றின?
இவையொன்றும் மூட நம்பிக்கையில் எழுந்தவை அல்ல.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்

என்றபடி ஆங்காங்கு வாழ்வாங்கு வாழ்ந்த பலர், தேவதைகளாக்க் கருதப்பட்டனர்.

முத்தன், முனியப்பன், காடன், மதுரை வீரன் என்பன போன்ற ஆண் தெய்வங்களும்;

ஆலையம்மன், எல்லையம்மன், படவேட்டம்மன் போன்ற பெண் தேவதைகளும், ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்து மடிந்தவர்களாக இருக்க வேண்டும்.
‘கற்பரசி கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் கோவில் கட்டினான்’ என்ற செய்தியிலிருந்தே, கற்புடைய பெண்களுக்கு அந்தக் கற்பினால் ஊராரிடையேயும், தன் சுற்றத்திடையேயும் பெருமை பெற்ற பெண்களுக்குக் கோவில் எழுப்புவது, இந்துக்களின் வழக்கமாய் இருந்திருக்கிறது என்பதை அறிய முடியும்.
கற்பு, ‘அறம், மறம்’ என் இருவகையாகப் பிரிக்கப்படும்.

கணவன் கொல்லப்பட்டான் என்ற செய்தி அறிந்து பொங்கி எழுந்து, மதுரையை எரித்த கண்ணகியின் கற்பு- மறக்கற்பு.

கணவன் இறந்தான் என்ற செய்தியை அறிந்தவடுனேயே தானும் இறந்த கோப்பெருந்தேவியின் கற்பு - அறக்கற்பு.
இந்த அறம்- மறம் இரண்டையுமே தெய்வமாகக் கருதி இருக்கிறார்கள்.
மறக் கற்புடைய பெண்களே, ருத்ர தேவதைகளாகக் காட்சியளிக்கிறார்கள்!
காளி, மாரி போன்ற ருத்ர தேவதைகள் இவ்வழி நம்பிக்கையில் எழுந்தவையே!
அமைதியான அம்மன்கள் அறவழிக் கற்பில் எழுந்தவையே! அதுபோல் ஆண் தெய்வங்களிலும் கோபத் தெய்வங்களாக்க் காட்சியளிப்போர், வீரர்களாக வாழ்ந்திருக்க வேண்டும்.
ஒருவேளை, பயங்கரமான குணம் படைத்தவர்களாகவும் வாழ்ந்திருக்கலாம்.
அவர்களது ஆவியை அமைதிப்படுத்துவதற்கே பலி கொடுக்கும் பழக்கமும் வந்திருக்கலாம்.
பெண் தேவதைகளிலம் சில ருத்ர தேவதைகள் பயங்கரமான குணம் படைத்தவர்களாக இருந்து வாழ்ந்து, சாந்தி இல்லாமல் இறந்து போனவர்களாக இருக்கலாம்.
அவர்களையும் அமைதிப்படுத்தவே பலி கொடுக்கும் பழக்கம் வந்திருக்கலாம்.
கையிலோ இடையிலோ வாளுடன் கூடிய பயங்கரமான உருவம் படைத்த ஒரு வீரனின் சிலை, சுற்றிலும் இருபது முப்பது மண் குதிரைகள்!
ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு சிலைக்கும் வேறு வேறு பெயரிருக்கிறது.
ஒரே பெயரைக் கொண்ட பல சிலைகளும் உண்டு.
அவரவர்களுடைய சுற்றத்தினர், ங்கள் குலத்தில் வாழ்ந்த ஒருவனுக்கோ ஒருத்திக்கோ எழுப்பிய இந்தச் சிறு ஆலயங்கள், நாளடைவில் ஊராரின் நம்பிக்கைக்கு உரியனவாகி, தெய்வங்களாகி இருக்க வேண்டும்.
இந்தக் குட்டித் தேவதைகளை வணங்கும் எண்ணம் ஏன் வந்தது?
‘மரணத்திற்குப் பிறகு ஆவி உலவுகிறது’ என்ற நம்பிக்கையிலேயே இது எழுந்தது.
அந்த ஆவியைச் சாந்தப்படுத்தினால், தங்கள் குடும்பத்திற்கு அது உதவும் என்று இந்துக்கள் நம்பினார்கள்.
இன்றைக்கும், இறந்து போனவருக்கு அனுதாபம் தெரிவிக்கும்போது, ‘அவர் ஆத்மா சாந்தி அடைக!’ என்று குறிப்பிடுகிறோம் அல்லவா!
இறந்துபோன தங்கள் மூதாதையருக்குப் படையலிடும் பழக்கம், இன்னும் இந்துக்களிடையே இருப்பதை நாம் பார்க்கிறோம்.
எங்கள் குடும்பங்களில், ஒவ்வொரு திருமணத்திலும் மாப்பிள்ளை அழைப்பிற்குப் பிறகு, முதல் நாள், மூதாதையர் படைப்பு நடைபெறுகிறது.
அவர்கள் கட்டியிருந்த வேட்டிகளும், சேலைகளும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு , ஓர் ஓலைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு திருமணத்திற்கு முன்பும், அவற்றைத் துவைத்துக் காயப்போட்டு மடித்து, பழையபடியும் ஓலைப் பெட்டியில் வைத்து, பக்கத்தில் இரண்டு குத்து விளக்குகளை ஏற்றிவைத்து, படைப்பு நடத்துகிறார்கள்.
சில வீடுகளில், கோடி ஆடைகளை வைத்து நடத்துவதும் உண்டு.
படைப்பு, பெரும்பாலும் கோழி இறைச்சியும் முட்டையும் கலந்ததாக இருக்கும்.
ஏதாவது பலி கொடுத்துச் சாந்தி செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் எழுந்ததே அது.
கிராமங்களில் தேவதைக் கோவில்கள் பலவற்றில், சிலை உருவம் ஏதுமில்லாமல் ஒரு சாமாதி மேடு மட்டுமே இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
அது ந்தத் தேவதை வாழ்ந்து மடிந்த ஒரு பெண் என்பதை வலுப்படுத்துகிறது.
இராமநாதபுரம் ஜில்லா திருப்பத்தூர் தாலுக்காவில் நான் பிறந்த ஊர் சிறுகூடற்பட்டி என்ற கிராம்மாகும்.
அங்கே ‘மலைஅரசி’ ‘அழகியதேவி நாச்சியார்’ என்று இரண்டு தேவதைகள் உண்டு.
மலையரசியின் கோவில் ஒரு சிறிய குடியை; அவ்வளவுதான்.
உள்ளே சிலை கிடையாது. ஒரு சமாதி மேடு மட்டுமே உண்டு.
அழகிய தேவியின் கோவில் சுண்ணாம்புச் சுவரால் ஆனது தான் என்றாலும், ஒரு தேவதைக் கோவில் என்ற அளவில், சிறியதாகவே இருக்கின்றது.
இந்த தேவதைகளை ‘நாச்சியார்’ என்ற பட்டப் பெயரோடு அழைக்கிறார்கள்.
‘நாச்சியார்’ என்ற பட்டம் முக்குலத்து ராணிகளுக்குரிய பட்டமாகும்.
‘தேவி’ என்ற பொருள் தருவது அந்தப் பட்டன்.
பெரும்பாலும், பாண்டிய நாட்டில் ராமநாதபுரம் ஜில்லாவில் மட்டுமே, இந்தப் பட்டப்பெயர் அதிகம்.
முக்குலத்துத் தாய்மார்கள், மற்ற ஜாதிப் பெண்களை வாழ்த்தும்போது, “நாச்சியார் நல்லா இருக்கணும்!”- என்று வாழ்த்துவார்கள்.
பல இடங்களில் ‘நாச்சியார் கோவில்கள்’ என்ற கோவில்கள் உண்டு. .’நாச்சியம்மை’ ன்ற பெயர்ள் அதனடியாகத் தோன்றியவையே.
ஆகவே, இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள அம்மன்களில் பல, முக்குலத்து வீரப் பெண்மணிகளாக இருந்திருக்க வேண்டும்.
‘எங்களூர் மலையரசி நாச்சியாரோடும், அழகிய தேவி நாச்சியாரோடும் கூடப்பிறந்த பெண்கள் ஐந்து பேரென்றுத், அவர்க் எழுவரும் தேவதைகள் என்றும் கூறுகிறார்கள்.
பக்கத்துப் பக்கத்து ஊர்களில் ஒவ்வொரு தேவதைக்கும் கோவில் இருக்கிறது.
எல்லாத் தேவதைகளின் பெயர்களும் அழகான தமிழ்ப் பெயர்கள்.
ஆகவே, ‘சிறு தேவதை வணக்கம். ஆவி, நம்பிக்கையில் எழுந்ததே’ என்று திட்டமாக்க் கொள்ளலாம்.
நான் ‘சிவகங்கைச்சீமை’ படம் எடுத்துக்கொண்டிருந்தபோது அது பற்றிய விவரங்களைச் சேகரிப்பதற்காக சிவகங்கைப் பகுதிக்கும் போயிருந்தேன்.
அங்கே ‘நரிக்குடி’ என்ற ஊர்!
இருபது வீடுகளே இருக்கும் அந்த ஊரில் ஒரு பழங்ககாலக் கல் சத்திரம்.
‘யாத்ரீகர்களுக்கு இரவு பகலாக உணவு பரிமாறிய இடம் அது’ என்று சொல்லுவார்கள்.
மருதுபாண்டியர் ஆட்சிக்காலத்தில், அந்தச் சத்திரத்தில் ஓர் இளம் பெண்ணும் அவள் கணவனும் வந்து தங்கியிருந்தார்களாம்.
இரவு நேரத்தில், அவள் கணவனைச் சில பேர் கூட்டிக்கொண்டு போய்க் கொலை செய்து பக்கத்தில் இருக்கும் கண்மாய்க்குள் போட்டுக் கல்லை வைத்துவிட்டார்கள்.
அவன் வளர்த்த நாய்க்குட்டி ரத்தக்கறையோடு ஓடிப்போய், அவன் தலைவியின் சேலையைக் கவ்விக் கூட்டி வந்து சடலத்தைக் காட்டிற்றாம்.
அவள் அழுது புலம்ப, ஊரெல்லாம் கூடி மருது பாண்டியனுக்கு செய்தி அனுப்பினார்களாம்.
மருதுபாண்டியர் வருகிற நேரத்தில், அந்தப் பெண் கணவனோடு உடன்கட்டை ஏறுவதற்குத் தயாராக இருந்தானாம்.
மருதுபாண்டியர் எவ்வளவோ தடுத்தும் கேளாமல், தான் கட்டியிருந்த சேலை, கழுத்தில்போட்டிருந்த கருமணி, கைகளில் போட்டிருந்த வளையல்கள் அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டு, வெள்ளைச் சேலையைக் கட்டிக்கொண்டு, உடன்கட்டை ஏறிவிட்டாளாம்.
அவள் அணிந்திருந்த ஆடைமணிகளை ஓர் ஓலைப்பெட்டியில் வைத்து, மருதுபாண்டியர் வம்சா வழியில் ஒருகுடும்பத்தினர், பல தலைமுறையாகப் பூஜித்து வருகிறார்கள்.
மருதுபாண்டியானது ஆண் வாரிசுகள் அனைவரையும் வெள்ளைக்காரர்கள் கொன்று விட்டதால், பெண் வாரிசுகளே பாதுகாத்து வருகிறார்கள்.
175 ஆண்டுகளாக ஒரே பரண் மீது போடப்பட்ட காய்ந்த மாலைகளைப் பார்த்தோம்.
அவர்களைக் கெஞ்சிக் கேட்டு முதன்முறையாக அந்தப் பெட்டியைக் கீழே இறக்கிக் காட்டச் சொன்னோம்.
அது பழங்காலத்து ஓலைப்பெட்டி. ஆதலால் தொட்ட இடம் மட்டும் கையோடு வந்து கொண்டிருந்தது.
பிறகு, அப்புறமாகப் பலகைக் கொடுத்து இறக்கிய பார்த்தோம்.
அந்தச் சேலையையும், கருகமணியையும் பார்த்தபோது நான் கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்.
அதைப்பார்த்துக் கொண்டிருந்த முக்குலத்து மூதாட்டி, பாட்டில் மூலமே அவ்வளவு விஷயங்களையும் சொன்னாள்.
(பாண்டிய நாட்டுப் பெண்களுக்குப் பாடல் என்பது உடம்போடு பிறந்தது)
இன்றைக்கும் குட்டித் தேவதைகள் மிக அதிகமாக உள்ள நாடு பாண்டிய நாடுதான்.
ஆகவே இந்துக்களின் ஆவி நம்பிக்கை அழிக்க முடியாத நம்பிக்கை என்பது புலனாகிறது.
இன்றும், ஆவிகள் பற்றிய பல்வேறு செய்திகளை நாம் பத்திரிகைகளில் பார்க்கிறோம்.
அதில் எனக்கு ஒரே ஆசை.
தமிழகம் முழுவதிலும் உள்ள குட்டித் தேவதைகள் பற்றிய விவரங்களை யாராவது சேகரிக்க வேண்டும்.
அந்தத் தேவதைகள், பற்றிய கர்ண பரம்பரைச் செய்திகளையும் விசாரித்து எழுத வேண்டும்.
அப்படி முழுமையான விபரங்களுடன் கூடிய ஒரு நூலை யாராவது முயன்று ஊர் ஊராகப் போய் அதையே வேலையாக வைத்துக்கொண்டு எழுதுவாரானால், அந்த நூலுக்கு ஒரு நல்ல சன்மானம் தரவும், அதை என் நண்பர்கள் மூலம் வெளியிடவும் நான் தயாராக இருக்கிறேன்.
நன்றி :- கவியரசு கண்ணதாசன்

No comments:

Post a Comment