Sunday, December 26, 2010

அர்த்தமுள்ள இந்துமதம் I - 18


18. பிற மதங்கள்


இந்து மதம் பிற மதங்களை வெறுப்பதில்லை. சொல்லப்போனால் எல்லா மதங்களையும் தன்னோடு சமமாகவே கருதுகிறது.

மத துவேஷம், எந்தக் காலத்திலும் இந்துக்களால் ஆரம்பிக்கப்பட்டதில்லை.
அதன்பரந்த கரங்கள், அத்தனை மதங்களையும் அணைத்துக் கொண்டே வளர்ந்திருக்கின்றன.
ஓர் ஏரியின் நீரைப்போல் பரம்பொருளையும், அதில் இறங்குனிற் பல படித்துறைகளைப் போல் எல்லா மதங்களையும் பரமஹம்ஞர் காணுகின்றார்
அன்பின் மூலம் அன்பு வளர்வதைப் போல், வெறுப்பின் மூலம் வளர்வதில்லை என்கிறது இந்து மதம்.
வெறுப்பு ஒரு குறுகிய கூட்டுக்ள் சதிராடுகிறது. அன்போ, வானையும் கடலையும்போல், அறிவை விரியச்செய்கின்றது.
நிலத்தைப்பங்கு போட்டுக் கொள்வது போல் வானத்தைப் பங்கு போட முடிவதில்லை.
‘நிலம்’ என்பது மதம்? ‘வானம்’ என்பது பரம்பொருள் என்கிறார் பரம ஹம்சர்;
‘சமண மதம் பரவி கிடந்த காலத்தில் அதைக் கருவறுத்து, சமணர்களைக் குழுவிலேற்றிய கூன் பாண்டியனும், மங்கையர்கரசியும் தான் பிற மதங்களைத் துவேஷித்த முதலாவதும் கடைசியுமான இந்துக்கள்.
அவர்களுக்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி, இந்து மதம் யாரையும் வெறுத்ததில்லை.
“வீட்டின் உச்சி முகட்டுக்குப் போக ஏணி, மூங்கில் படி, கயிறு- இவற்றில் ஏதேனும் ஒன்றன் உதவியைக் கொண்டு ஏறலாம். அது போலப் பரம்பொருளை அடைவதற்கு ஒவ்வொரு மதமும் அப்படிப்பட்ட மார்க்கங்களில் ஒன்றைத்தான் காட்டுகிறது.
மின்சார விளக்கின் ஒளி மங்கலாகவோ, பிரகாசமாகவோ வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகத் தோன்றுமாயினும், மின்சாரம் ஒரே இடத்திலிருந்து தான் வருகிறது
அதுபோலவே, வெவ்வேறு காலத்தில் தேசத்தோறும் தோன்றிய மதபோதகர்கள் அனைவரும், சர்வ சக்தியுள்ள ஒரேயொரு மூலப்பொருளிடமிருந்து இடைவிடாது பெருகிக் கொண்டிருக்கும் ஒளியை வெளியிடும் தீப ஸ்தம்பம் போன்றவர்களே” என்றார் பரமஹம்சர்.
எல்லா மதங்களாலும் போற்றப்படும் இறைவன் ஒருவனாகவே இருந்தால் ஏன் அவனைப் பல மடங்கு பல மாதிரி வருணிக்கின்றன?
இங்கு பரமஹம்சரின் பதில்:
“நீ வீட்டு எஜமான்: உன் மனைவிக்குக் கணவன்; மகனுக்குத் தந்தை; வேலைக்காரனுக்கு முதலாளி; ஆனாலும் நீ ஒருவன்தான்.
அவரவரும் உன்னிடம் கொண்ட உறவு முறையை வைத்து உன்னைப் பார்ப்பதுபோல், பலமதத்தவரும் ஆண்டவனைப் பல விதத்தில் பார்க்கிறார்க்கள்.”
ராமகிருஷ்ணரின் இந்த வாக்கு இந்துவின் விரிந்த ஞானத்துக்கு எடுத்துக்காட்டு.
இந்து மதத்திற்கு எதிராகப் பல கட்டங்களில் தோன்றிய நாத்திகவாதம், தானாகவே மடிந்து போனதற்குக்காரணம் இதுதான்.
சகிப்புத் தன்மையையும், அரவணைப்பையும் இந்து மதம் வலியுறுத்தியது.
“உடலில் பட்ட காயம் மறைந்துவிடும். உள்ளத்தில் பட்டால் மறையாது. ஆகவே,பிறரை நீ புண்படுத்தாதே” என்கிறது இந்து மதம்.
தண்டனையைக் கடவுளின் பொறுப்பில் விட்டு விடுவதால், நடைமுறைகளைத் தாங்கிக்கொள்கிற சக்தி இயற்கையாகவே வந்து விடுகிறது.
“காலப்போக்கில் ஒவ்வொன்றும் மாறுகிறது” என்று விஞ்ஞான உண்மையை, வேதாந்த உண்மையாக இந்துக்கள் எப்போதோ சொல்லிவிட்டார்கள்.
‘மாறும் வரை பொறுத்திரு’ என்பதே இந்து மதத்தின் உபதேசம்.
மனப்பக்குவம் இல்லாதவன், நினைத்தபடி எல்லாம் நடக்கிறான்.
வழியில் கிடைக்கும் அனுபவங்கள், அவனுக்கு அந்தப் பக்குவத்தை உண்டாக்கி விடுகின்றன.
‘வெறுபை வளர்ப்பவனும் என்றோ ஒருநாள் பக்குவம் பெறுவான்; அதுவரை அவனை நாம் சகிப்போம்’ என்பதே இந்து மத்தின் சாரம்.
இவற்றை நான் குறிப்பிடுவதற்குக் காரணம் இந்தத் தொடர் கட்டுரையில், நான் பிற மதங்களை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டி வந்த கடிதமே.
இந்து மதத்தின் சிறப்பியல்புகளை நான் விவரித்துக் கொண்டுபோகும்போது, வேறு மதங்களுக்கு அந்தச் சிறப்பில்லை என்ற கருதக்கூடாது.
நான் ஓர் இந்து என்ற முறையில், எனது மதத்தின் மேன்மைகளை நான் குறிப்பிடுகின்றேன்.
அவை பிற மதங்களில் இருக்கலாம்; நான் மறுக்க வில்லை.
உதாரணமாக, ‘கல்லானாலும் புல்லானாலும்’ என்ற கட்டுரையில், இந்துப் பெண்களின் கற்பியல்புகளை நான் விவரித்ததைப் படித்துவிட்டு, “எங்கள் மதத்தில் கற்புள்ள பெண்கள் இல்லையா?” எனுற் ஒரு கிறிஸ்துவ நண்பர் எனக்கு எழுதியிருக்கிறார்.
நான் அப்படிச்சொன்னேனா?
‘கற்பை வலியுறுத்தும் கதைகள் இந்து மதத்தில் அதிகம்’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.
எனது மூதாதையர்கள் எப்படி எந்த மதத்தையும் வெறுக்கவில்லையோ, அப்படியே நானும் வெறுக்க மாட்டேன்.
சாதாரண மனிதன் தன் அறியாமையால் தன் மதமே பெரியதென்று எண்ணி ஆரவாரம் செய்கிறான்.
உண்மை ஞானம் எனக்கு இன்னும் உதிக்கவில்லை. அது உதிக்கும் முன்னாலேயே எல்லா மதங்களையும் நேசிக்கும் அறிவை நான்  பரமஹம்சரிடம் இருந்து பெற்றுக் கொண்டிருக்கிறேன்.
ஆகவே, இந்தக் கட்டுரையில், தொடர்ச்சியாக இந்து மதத்தின் மேன்மையை நான் குறிப்பிடும் போதெல்லாம், பிற மதங்களில் அவை இல்லை என்று சொல்வதாகக் கருதக்கூடாது.
‘என் மனைவி அழகானவள்’ என்று சொன்னால் ‘அவன் மனைவி கோரமானவள்’ என்று அர்த்தமல்ல!
நன்றி :- கவியரசு கண்ணதாசன்

No comments:

Post a Comment