Saturday, December 25, 2010

அர்த்தமுள்ள இந்துமதம் I - 09


9. தாய் - ஒரு விளக்கம்

பெயர் சொல்ல விரும்பாத ஒரு நண்பர் கீழ்கண்ட கடிதத்தை எனக்கு எழுதியிருக்கிறார்.

அவர் எழுப்பியிருக்கும் ஐயம் சிந்தனைக்குரியது.
அது பற்றி விளக்கம் கூறுமன், அவரது கடிதத்ததை அப்படியே சமர்ப்பிக்கிறேன்.
“தாயை வணங்கு; தந்தையைத்தொழு; தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை; கோவிலில் சென்று அடையும் புண்ணியத்தைவிடத் தாயை வணங்கிக் கிடைப்பது பெரும் புண்ணியம்’ என்று.
இந்த வாரக் கதிரில் எழுதியுள்ளீர்கள். நானும் சிறிதளவு படித்திருக்கிறேன்; ஆனால் எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை; குழம்புகிறது.
அதாவது, தாய் எப்படிப்பட்டவராக இருப்பினும் அவர் எத்தகைய செயலைச் செய்பவராக இருந்தாலும் (கற்பல்ல ஈண்டு குறிப்பது) பிள்ளையிடம் வாஞ்சையோ பெரியோரிடத்து (தாய்க்கு) மதிப்போ, மஞ்சள் குங்கும்ம் தந்தவனிடத்து மாண்போ இன்றித் தான்தோன்றித் தனமாக நடக்கும் தாயைக்கூட மதிக்கலாகுமோ?
மேலும் கூட்டுக்குடும்பம் குழப்பமடைந்து சிதறிப்போகுச்செய்யும் உள்ளம் படைத்து, கூச்சல் குழப்பம் மிகுதியும் விளைவித்து, வயது வந்த பிள்ளைகளை மதிக்காமல் நடக்கும் தாய்க்கு, ‘அர்த்தமுள்ள இந்துமதம் ‘ என்ன சொல்கிறது.?
இப்படிப்பட்ட ஒருதாயை வைதல் ஏற்படக்கூடிய பாவ புண்ணியங்களைப் பற்றி நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை அறிய ஆவலுடன் இருப்பேன்! ஏன் தெரியுமா? நான் வீட்டுக்கும், வீட்டுப் பெரியோர்களுக்கும் நல்லது செய்ய முயல்கினேன்; ஆனால் புண்ணியங்கள் கிடைக்கும்?”
உண்மைதான்.
ஒரு தாய் ராட்ச்சியாக இருந்துவிட்டால், அவளும் வணங்கத் தக்கவள்தானா?
மகனுக்குச் சோறு போடாமல், மணாளனை மதிக்காமல் கற்பு நெறி உள்ளவளாக இருந்தாலும், இந்துக்கள் சொல்வது போல் ஓர் அன்னையின் குணம் இல்லாமல் ராட்ச்சப் போக்கில் நடப்பவளை எங்ஙனம் வணங்குவது?
முதலில் இதற்கு என்ன பதில்
“அப்படிப்பட்ட தாய் லட்சத்தில் ஒருத்தியே” என்பதாகும்.
எந்த நியதியிலும் விதி விலக்கு உண்டு.
ராட்ச்ச தாயும் அப்படியே!
‘மூன்று தலையோடு கன்றுகுட்டி, ஐந்து குலை தள்ளுகிற பசுக்களும் உண்டு. அவற்றில் சொந்தக்கன்றுகளையே முட்டித்தள்ளுகிற பசுக்களும் உண்டு. இவை அபூர்வமானவை.
கண்ணாடித் துண்டுகளையே தின்று ஒருவர் ஜீவிக்கிராராம்.
பூமிக்கடியில் ஆறு மாதங்கள் இருந்த ஒருவர் உயிரோடு வெளிவருகிறார்.
இவர்கள் எப்படி லட்சத்திலோ, கோடியிலோ ஒருவராக்க் காட்சியளிக்கிறார்களோ, அப்படியேதான் குணங்கெட்ட தாயும்.
சத்திய தேவதை ருத்திர தாண்டவமும் ஆடுவதாக இந்துக்களின் புராணங்கள் கூறுகின்றன.
ருத்திர தாண்டவம் முடிந்த பிறகு அமைதியடைகின்றது.
ராட்ச்சக் குணங்கொண்ட தாயும் தன் முதுமையில் அமைதியடைகிறாள்.
சட்டித் தூக்கி, தெருத்தெருவாக அலைய வேண்டிய நிலைமைக்கு வருகிறாள்.
பரம்பொருள் அந்தத்தாயை அப்படித்தான் தண்டிக்கிறான்.
பசி, பட்டினி, நோய்களால் வெந்து, தன் பாவங்களுக்குக் கழுவாய் தேடுகிறாள் அவள்.
அத்தகைய தாய்க்குத் துர்மரணமே சம்பவிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
மலர் கல்லாகிவிட்டால் வாசம் போய்விடுகிறது.
தோற்றம் மலரானாலும் அது வெறும் கல்லே!
குணம் கெட்ட தாயும் அப்படியே!
இப்படிப்பட்ட தாய் எப்படி உற்பத்தியாகிறாள்?
இந்துக்களின் பூர்வஜென்ம நம்பிக்கையை இங்கே தான் நானும் ஒப்புக்கொள்கிறேன்.
பூர்வஜென்ம பாவ புண்ணியம் தொடர்ந்து வருகிறது. காரணம் தெரியாத துயரங்களுக்கு அதுதான் காரணம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
‘போன ஜென்மத்திலும் மகனாலும் மணாளனாலும் பழி வாங்கப்பட்ட தாயொருத்தி, அடுத்த ஜென்மத்தில் இருவரையும் பழி வாங்குகிறாள்’ என்றே நான் அதற்குப் பொருள் கொள்கிறேன்.
இது எனது யூகமே; வேறு பொருள்களும் இருக்க்க்கூடும்.
இல்லையென்றால், உலகத்திலேயே மென்மையான் அன்னையின் இதயம் கல்லாவது எப்படி?
இறைவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று என்பதைத்தவிர, வேறு பதில் சொல்ல எனக்குத் தோன்றவில்லை.
‘எதிலும் விதிவிலக்கு உண்டு’ என்பதைத்தான் மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
கோடானுகோடி இந்துக்களில் இப்படிப்பட்ட தாய்மார்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே இருப்பார்கள்.
அதற்காக, அந்தத் தாயின் மகனோ, கணவனோ தாய்க்குலத்தையே வெறுக்ககூடாது.
வகை வகையான மலர்கள் பூத்துக்குலுங்கும் உலகில் ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு விதமான வாசம் உண்டு.
ஆனால் மலர் ஒன்று ‘மல நாற்றம்’ அடிப்பது உங்களுக்குத்தெரியுமா?
ஆனால் அபூர்வமான மலர்.
அது மலரும் செடியின் பெயர் ‘பீநாறிச் சங்கு’ என்பதாகும்.
அந்தச் செடியின் இலைகள் கூட மலநாற்றமே அடிக்கும்.
அந்த இலைகளை அரைத்துக் குடித்தால், உடம்பில் எவ்வளவு சிரங்கு இருந்தாலும் உதிர்ந்துவிடும்.
அந்த மலரைத் தேடிப்பிடித்து வாங்கிப்பாருங்கள். அதைவிட அழகான மலர் உலகத்திலேயே கிடையாது.
ஆனால் அதை மூக்கிலே வைத்தால் மூன்று நாளைக்குச் சோறு செல்லாது.
அதுவும் இறைவனின் படைப்புத்தான்!
உலகத்திலுள்ள அபூர்வத் தன்மைகளை மனத்திற்கொண்டே, இந்துக்கள் பூர்வஜென்ம நம்பிக்கையை வளர்த்தார்கள்.
குணங்கெட்டவளைத்தாயாகப் பெற்றவர்கள், இந்தப் பூர்வஜென்ம நம்பிக்கையிலேயே அமைதியுற வேண்டும்.
அவர்கள் அவளை வணங்க வேண்டியதில்லை. அவளை விட்டு ஒதுங்கிவிட வேண்டும்.
முதுமையில் அவளே வந்து அவர்களை வணங்குவாள்.
விதிவிலக்குகளை வைத்துப் பொதுவான தத்துவங்களை யாரும் எடை போடக்கூடாது.


பொதுவில் ‘தாய்மை என்பது இந்துக்களால் சக்தி என்றழைக்க்படுகிறது.

ரத்த பாசத்தை உடம்பு சிலிர்க்க வருணிப்பது இந்து மதம்தான்.
பூமியைப் ‘பூமாதா’ என்றும் பசுவைக் ‘கோமாதா’ என்றும் வருணிப்பவர்கள் இந்துக்கள்தாம்.
‘பொறுமையில் பூமாதேவி’ என்றும், அமைதியில் ‘பசு’வென்றும் சொல்பவர்கள் இந்துக்கள்தான்.
ஆகவே, பொறுமையும் அமைதியும் நிறைந்தவள் தாய் என்பது இந்துக்கள் மரபு.
பொறுமை, அமைதி, ரத்தபாசம், தன் வயிறைப்பட்டினி போட்டு மகனுக்கு ஊட்டுதல் - இவையே தாய்மை!
இந்துக்களிடேயே ஒரு கதை உண்டு.
ஒரு தாய்; அவளுக்கு ஒரு மகன்; அந்த மகனோ தாசிலோலன்; ஒரு தாசியிடம் மனதைப் பறிகொடுத்தான்.
‘மனம் போனபடியே பொருள் போகும்’ என்றபடி பொருளையும் பறிகொடுத்தான்.


அவனிடம் பொருளில்லை என்பதை அறிந்த கணிகை அவனைத்துரத்தியடித்தாள்.

அவனோ மோக லாகிரி முற்றி "உனக்கு எது வேண்டுமோ கொண்டு வருகிறேன்" என்று காலில் வீழ்ந்தான்.
அவள் கேலியாகச் சிரித்துக்கொண்டே, “உன் தாயின் இருதயம் எனக்கு வேண்டும்” என்றாள்.
காம மயக்கத்தில் சிக்கிய அவன், தாயிடம் ஓடினான்.
“அம்மா! அவளுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. உன் இருதயம் வேண்டும் என்கிறாள். அவளை என்னால் மறக்க முடியாதம்மா” என்றழுதான்.
தாய் கேட்டாள்.
“அதன்மூலம் அவள் திருப்தியடைந்து உன்னுடனேயே இருப்பாளா மகனே?”
“இருப்பாள்!” என்றான் மகன்.
தன்னைக் கொன்று இருதயம் வெட்டி எடுத்துக் கொள்ளும்படி தாய் கூறினாள்.
அவன் தாயைக் கொன்றான். இருதயத்தை எடுத்தான். வலது கையில் ஏந்தியவாறு கணிகை வீடு நோக்கி ஓடினான். வழியில் ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்தான். கையிலிருந்த தாயின் இருதயம் நான்கு அடி தள்ளி விழுந்தது.
அடிபட்டு விழுந்த அவனைப்பார்த்து அதே இருதயம் சொன்னது:
“ஐயோ! வலிக்கிறதா மகனே! நான் உயிரோடில்லையே உனக்கு மருத்தவம் செய்ய!”
மகன் “அம்மா!” என்றலிறினான். அவன் ஆவிபிரிந்தது.
ஆம், அதன் பெயர் தான் தாய்மை!
ஓர் இடத்தில் நான் சொன்னேன், “இறைவன் உன் ஆத்மாவுக்கு மட்டுமே பொறுப்பேற்றுக்கொள்கிறான்” என்று.
ஆனால் ஓர் அன்னையோ உன் ஆத்மாவுக்கும் உடம்புக்கும் பொற்பேற்றுக்கொள்கிறாள்.
கடைசியாக, தாயை மதிப்பவர்களுக்கு, பக்தி செலுத்துவோர்களுக்கு, எப்படி வாழ்வு வரும் என்பதைச் சாதாரண மனிதனுக்கும் புரியும்படி சொல்கிறேன்.
இன்று படவுலகில் இருபது வருஷங்களாக அசைக்க முடியாமல் இருந்து வரும் நட்சத்திரங்கள், அரசியலில் திடீரன்று, அதிர்ஷ்டம் வாய்ந்த - குறைந்த கல்வியே உள்ள தலைவர்கள், அனைவரையும் எண்ணிப் பாருங்கள். அவர்கள் அனைவரும் தாயிடம் பக்தி செலுத்திய ஒரே காரணத்தால் முன்னுக்கு வந்தவர்கள்!
நன்றி :- கவியரசு கண்ணதாசன்


No comments:

Post a Comment