Saturday, December 25, 2010

அர்த்தமுள்ள இந்துமதம் I - 11


11. கல்லானாலும்…. புல்லானாலும்….


‘ஒரு பெண் உத்தமியாக இருக்க வேண்டும்; பத்தினியாக இருக்க வேண்டும்” என்ற மரபு எல்லா மதங்களிலும் உண்டு.

ஆனால் அதை வலியுறுத்தும் கதைகள் இந்து மத்தில்தான் அதிகம்.
இந்துப் புராணங்களில் வரும் எந்த நாயகியும் அப்பழுக்கற்ற பத்தினியாக்க் காட்சியளிப்பாள்.
குடும்பத்தில் கெட்ட சூழ்நிலை ஏற்படுவதற்குப் பெண் தான் காரணமாக அமைவாள் என்பதால், மானத்தையும் கற்பையும் பெண்ணுக்கே வலியுறுத்திற்று இந்து மதம்.
கற்பு என்பது, நல்ல தாயிடமிருந்து நல்ல மகள் கற்றுக்கொள்வது.
அடிப்படையிலிருந்தே அந்த ஒழுக்கம் வளர வேண்டுமென்பதற்கு, இந்து மதம் சான்று காட்டி நீதி சொல்கிறது.
‘பிற புருஷனை அவள் மனத்தால நினைத்தாலும் கற்பிழந்து விடுகிறாள்’ என்று இந்து மதம் அச்சுறுத்துகிறது.
பெண் ‘தலைகுனிந்து நடக்க வேண்டுமென்று இந்துக்கள் விரும்புவது’ அவள் பிற முகங்களைப் பார்க்காமல் இருப்பதற்குத்தான்.
அழகான ஆடவன் முத்தை அவள் பார்த்த ஒரு கணம் அதிர்ச்சி வந்து, பிறகு அவள் தன்னிலைகு மீண்டால்கூடக் ‘களங்கம் என்று இந்துக்கள் கருதுகிறார்கள்.
‘காலைப் பார்த்து நட’ என்று அவர்கள் போதிப்பது அவள் பிற முகங்களைப் பார்க்காமல் இருப்பதற்கு மட்டுமல்ல; பூமியிலும் வாழ்க்கையிலும் வழுக்கி விழாமல் இருப்பதற்குங்கூட!
பெண்ணுக்கு அதை அதிகம் வலியுறுத்தினாலும் ‘ஆணுக்கும் அது வேண்டும்' என்கிறது இந்துமதம்.
திருமணத்தில் பெண்ணுக்குக் கழுத்தில் மாங்கல்யம் கட்டுகிறார்கள்! காலிலே ஆடவனுக்கு வெள்ளியால் ‘மெட்டி’ போடுகிறார்கள் இவை ஏன்?
நிமிர்ந்து நடந்துவரும் ஆடவன் கண்ணுக்கு எதிரே நடந்துவரும் பெண் கழுத்தில் மாங்கல்யம் இருப்பது தெரிய வேண்டும். ‘அவள் அந்நியன் மனைவி’ என்று தெரிந்து அவன் ஒதுங்கிவிட வேண்டும்.
தலைகுனிந்து நடக்கும் பெண்ணின் கண்களுக்கு எதிரே வரும் ஆடவன் கால் மெட்டி தெரிய வேண்டும். ‘அவன் திருமணமானவன்’ எனத்தெரிந்து அவள் ஒதுங்கி விட வேண்டும்.
ஒரு பெண்ணும் காளையும் சந்தித்து ஒருவரையொருவர் காதலிக்கலாம். மணம் செய்து கொள்ளலாம். காதல் நிறைவேறவில்லை என்றால பிரிவால் ஏங்கலாம்; துயரத்தால் விம்மலாம்; இறந்தும் போகலாம். அது ஒரு கதையாகவோ காவியமாகவோ ஆகலாம்.
ஆனால் திருமணமான ஒரு பெண்ணுக்கு  பிற புருஷன் மீது ஆசை என்பது கிஞ்சித்தும் வரக்கூடாது.
தாலி என்பது பெண்ணுக்குப் போடப்படும் வேலி; அதை அவள் தாண்டமுடியாது.

தமிழகத்திலே ஒரு மன்னனுக்குத் ‘தாலிக்கு வேலி’ என்ற பெயரே உண்டு.

திருமணத்தின் போது ‘அக்கினி’ வளர்க்கிறார்களே, ஏன்?
அவர்களது எதிர்கால ஒழுக்கத்திற்கு ‘அக்கினி அவர்கள் உள்ளத்தை எரிக்கிறான்; அவர்களைத் தண்டிக்கிறான்.
அதனால்தான், கற்பு நிறைந்த பெண்ணைக் ‘கற்புக்கனல்’ என்கிறார்கள். 
அம்மி மிதிக்கிறார்களே, ஏன்?
எல்லாக்குடும்பங்களுக்கும் இன்றியமையாத்து அம்மி. அந்த அம்மியின் மீது காலை வைப்பது, ‘என் கால் உன் மீது தான் ருக்கும்; உன்னைத் தாண்டிப் போகாது என்று சத்தியம் செய்வதே.
“படி தாண்டாதப் பத்தினி’ என்பது வழக்கு.
“படியைத் தாண்ட மாட்டேன்” என்பதே அம்மியின் மீது சொல்லப்படுவது.
அருந்ததியைப்போல் நிரந்தரக் கற்பு நட்சத்திரமாக நின்று மின்னுவேன்” என்று ஆணையிடுவதே.
‘பால்-பழம்’ சாப்பிடுவது ஏன்?
அது “பாலோடு சேர்ந்த பழம் போலச் சுவை பெறுவோம்” என்று கூறுவதே.
பூ மணம் இடுவது ஏன்?
“பூ மணம் போலப் புகழ் மணம் பரப்புவோம்” என்றே!
மாங்கல்யத்தில் மூன்று முடிச்சுப் போடுவதேன்?
ஒரு முடிச்சு கணவனுக்கு அடங்கியவளென்றும், 
மறு முடிச்சு தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவளென்றும், 
மூன்றாவது முடிச்சு தெய்வத்துக்குப் பயந்தவளென்றும் உறுதி கொள்ள வைப்பதே.
ஆம்; பெண்ணிற்குத் ‘தற்காப்பு’ வேண்டும்; தாய்-தந்தை ‘காப்பு’ வேண்டும்; தெய்வத்தின் ‘காப்பு’ அணியப்படுகிறது.
‘அவளைக் காப்பேன்’ என்ற உத்தரவாத்திற்காகவே கணவன் கையில் ‘காப்பு’க்கட்டப்படுகிறது.
குழந்தைப்பருவத்திலிருந்து முதுமைப் பருவம் வரை ஒரு பெண்ணைப் பக்குவமாக வைத்திருக்க இந்து மதம் கூறும் வித்தியாசங்கள் தாம் எத்தனை!
‘கற்புடைய பெண் நினைத்தால் கடவுள்களையே குழந்தைகள் ஆக்கலாம்’ என்று போதிக்கும் அனுசூயையின் கதை.
‘கற்புடைய பெண் விரும்பினால், சூரியனையே உதிக்காமல் செய்யலாம்’ என்று கூறும் நளாயினியின் கதை.
கற்புடைய பெண் மரணத்தையும் வெல்லுவாள்’ என்று கூறும் சாவித்திரியின் கதை.
அதையே வேறு வடிவில் நாகபஞ்சமி கதை.
இவையெல்லாம் பொய்க்கதைகள் என்ற வாதிலாம். ஆனால் ‘அவர்களைப் போல தன்மனைவி இருக்க வேண்டும் என்று விரும்புகிறவனுக்கு இவை மெய்க்கதைகளே!
கொல்லப்பட்டான் கணவன் என்றறிந்து, துடித்தெழுந்து மதுரை நகர் வலம் வந்து, ‘செங்கதிர்ச் செல்வனே! என் கணவன் கள்வனா?” என்று நியாயம் கேட்டுத் துர்க்கைக் கோயிலில் வளையல்களை உடைத்து மதுரையை எரித்தாள் கண்ணகி.
‘அவள் இடது பக்கத்து மார்பைத்திருகி எறிந்தாள்; மதுரை எரிந்தது’ என்கிறது சிலப்பதிகாரம்.
“மார்பைத்திருகி எறிந்தால் மதுரை எரியுமா?” என்று கேலி பேசுவோருமுண்டு.
“இடது பக்கத்து மார்பை” என்று இளங்கோ சொல்வதைக் கவனிக்க வேண்டும்.
இடது பக்கம்தான் இதயம் இருக்கிறது. அதுவும் மார்பை ஒட்டியே இருக்கிறது.
‘அந்த இருதயத்து அக்கினி மதுரையையே எரித்தது’ என்பதைத் தான் இளங்கோ அப்படி விவரிக்கிறான்.
“கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருஷன்” என்பது இந்துக்கள் பழமொழி.
“கல்லும் புல்லும் கணவனாகுமா?” என்று கேலி பேசுவோருமுண்டு.
வெறும் ஜடப்பொருள்களான கல்லையும், புல்லையும் இது குறிக்கவில்லை..
“உன் கணவன் மனது கல்லானாலும், அவன் உனக்கு கணவனே; 
சம்பாதிக்க முடியாத சக்தியற்ற கோழையாக ஊருக்குப் புன்மையானவனாக, வெறும் புல்லைப் போல இருந்தாலும், அவன் உனக்குப் புருஷனே” என்பது அதன் பொருள்.
பெண்ணைத் தெய்வமாக்கிக் கணவனை பக்தனாக்கி வாழ்க்கையைச் சந்தோஷமாக்க, இந்து மதம் எடுத்துகொண்ட முயற்சியைப் போல வேறு எந்த மதமும் எடுத்துக்கொண்டதில்லை.
அந்நியப் புருஷன் தன்னைப்பார்க்கிறான் என்று தெரிந்ததும் முந்தானையைச் சரிசெய்து கொள்ளும் பெண்கள் இந்துமதத்தின் சிருஷ்டிகள்.
கற்புக்கு இவ்வளவு காவல் வேலிகள் போட்ட பிறகும், பலாத்தாரமாக, வேறு வழியில்லாமல் கெடுக்கப்பட்ட பெண்களுக்குப பரிகாரமென்ன?
இங்கே நிகழ்ச்சியொன்று பழைய தத்துவத்தை வலியுறுத்துகிறது.
1947-48 - ல் பாகிஸ்தானில் கற்பழிக்கப்ட்ட இந்துப் பெண்கள் லட்சோபலட்சமாக இந்தியாவுக்கு வந்தார்கள்.
“அவர்கள் உடலால் தான் கெட்டார்கள். உள்ளத்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று காந்தியடிகள் வாதாடினார்.
எத்தனை இளைஞர்களுக்கு அந்த அநியாயம் புரிந்ததென்று தெரியவில்லை.
ஆனால், காந்தியடிகள் நேசித்து வணங்கிய ராம்பிரானின் வரலாற்றிலேயே அதற்கு நேரடியாகச்சாட்சியம் உண்டு.
அது அகலிகையின் கதை.
அகலிகையை முனிவன் மணந்தான்.
ஒருநாள் நள்ளிரவில் இந்திரன் சேவல் வடிவமெடுத்தான்; பொழுது விடிந்துவிட்டது. போலக்கூவினான்.
உண்மையறியாத முனிவன் சந்தியா வந்தனத்திற்குப் புறப்பட்டான்.
இந்திரன், முனிவன்போல் வேடமிட்டு அகலிகையை நெருக்கினான்.

திரும்பி வந்த முனிவன் உண்மையறிந்தான். அகலிகையைக் கல்லாகச் சபித்துவிட்டான்.

ராமபிரானின் காலடிபட்டுத்தான் அந்த சாபம் நீங்க வேண்டும்.
ராமபிரான் ஒருநாள் அந்தக் கல்லை மிதித்தார். அகலிகை மீண்டும் உயிர் பெற்றாள்.
முனிவனோ, “நான் என்று நினைத்து இன்னொருவனோடு அவள் கலந்ததெப்படி? இவள் பத்தினியானால் எனக்கும் இன்னொருவனுக்கும் ‘பேதம்’ தெரியாதா?” என்று கேட்டான்.
அதற்கு ராம்பிரான் சொன்னார்:
“கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய திரிகாலமும் அறிந்த முனிவன் நீ! நீயே உண்மைச் சேவல் எது, பொய்ச் சேவல் எது என்று தெரியாமல் சந்தியாவந்தனத்துக்குப் புறப்பட்டாயே! அவளோ ஒரு காலமும் தெரியாத பேதை! உள்ளத்தால் உன்னையே நினைத்தாள். உடலால் தான் கெட்டாள். ஆகவே ஏற்றுக்கொள்வது உன் கடமை”.
முனிவன் அவளை ஏற்றுக்கொண்டு விட்டான்.
பாகிஸ்தானில் கற்பழிக்கப்பட்ட பெண்கள் பற்றிய காந்தியடிகளின் வாதம், ராம்பிரான் வாதத்தின் எதிரொலியே!
நான் ஏற்கெனவே சொன்னது போல அறியாமல் செய்த பிழைகள் மன்னிக்கப்ட வேண்டியவையே!அவை விதிக்கணக்கில் சேர்க்கப்பட வேண்டியவையே!
‘அறிந்து கெடக்கூடாது’ எனக் குலமாதருக்கு விதித்த தடை, நமது குடும்ப வாழ்வை எவ்வளவு நிம்மதியாக்கி இருக்கிறது!
கற்பு என்றொரு வேலி போட்டு, பெண்ணைத் தெய்வங்களாக்கி, குடும்பங்களை மகிழ்ச்சிகரமாக்கிய ‘ஏ! இந்து மதமே, உன்னை என் உயிராக நேசிக்கிறேன்.’

நன்றி :- கவியரசு கண்ணதாசன்

No comments:

Post a Comment