Monday, January 31, 2011

அர்த்தமுள்ள இந்துமதம் II - 04



04. ஒரு புதிய சிந்தனை


ராமகிருஷ்ணா மிஷனைப் போல, உத்திரப்பிரதேசம் ஷாஜஹான்பூரில் ஸ்ரீராம சந்தர மிஷன் என்று ஒன்று இருக்கிறது.
இதனுடைய ஸ்தாபகர் மகாத்மா ஸ்ரீராம் சந்தரஜி ஆவார்கள்.
அவர்களைப் பற்றிய விவரங்களோடு, அவர்கள் எழுதிய `சத்யோதயம்’ என்ற புத்தகத்தின் தமிழாக்கம் ஒன்றையும், சேலத்தைச் சேர்ந்த நண்பர் திருவேங்கடம் என்பார் எனக்கு அனுப்பியிருந்தார்.
இந்து மதத்தில் அவர் ஒரு புதிய மார்க்கத்தை உபதேசிக்கிறார்.
எனக்குத் தெரிந்தவரை இந்த மார்க்கம் மற்றவர்கள் சொல்லாத ஒன்றாகும்.
விக்கிரக ஆராதனையை வெறும் ஸ்தூல ஆராதனை என்று வருணித்து, அது மனத்தின் உள் நோக்கத்தை அதிகமாகப் பூர்த்தி செய்வதில்லை என்று சிலர் கூறியிருக்கிறார்கள்.
வெறும் ஸ்தூல வழிபாட்டில் சிக்கியவர்கள் பெரும் ஆன்மிகப் பயிற்சியைப் பெற்றதில்லை என்று அவர்கள் வாதிக்கிறார்கள்.
ஸ்ரீராம் சந்தரஜியும் அதைத்தான் கூறுகிறார் என்றாலும், மற்றவர்கள் கூறாத புதிய கருத்துகளையும் கூறுகிறார்.
கோஷ்டி பஜனைகளைப் பற்றி அவர் கூறும் போது, கூட்டமாக உட்கார்ந்து பஜனை செய்வதில், தெய்வத் தியானம் விருப்பத்தை நிறைவேற்றுவதில்லை என்கிறார்.
விக்கிரக ஆராதனையும், பஜனைகளும் பக்குவமில்லாத தாழ்ந்த நிலையில் ஆரம்ப நிலையில் மட்டுமே பயன்படும் என்கிறார்.
சாதாரணமாக, இன்றைய இளைஞர்களின் மனத்தில் இதே சிந்தனை தோன்றியிருப்பது கவனிக்கத் தக்கது.
“கோவிலுக்குப் போய்க் கூட்டத்தோடு கோவிந்தா போடுவதில் என்ன கிடைக்கிறது?”.
“பஜனைப் பாடல்களை சத்தம் போட்டுப் பாடுவதில் என்ன பயன் இருக்கிறது?” என்று தான் இன்றைய இளைஞர்களும் கேட்கிறார்கள்.
ஆத்மாவுக்கு அமைதிப் பயிற்சி அளிப்பது பற்றியும், மனத்தின் கடிவாளங்களை இழுத்துப் பிடிப்பது பற்றியும், ஸ்ரீராம் சந்தரஜியின் கருத்துக்கள் சுவையாக இருக்கின்றன.
முழுப் பிரயத்தனத்தோடு தனியாகத் தியானம் செய்வதை அவர் வற்புறுத்துகிறார்.
இவை அனைத்தையும் விட, லௌகீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒட்டுமொத்தமாகப் பற்றற்ற வாழ்க்கையையும், துறவி வாழ்க்கையையும் போதிப்பதை அவர் கண்டிப்பதில் அர்த்தமிருக்கிறது.
குடும்ப வாழ்க்கையில் இருந்துகொண்டே பற்றுகளைச் சமநிலைப்படுத்தி, அளவற்ற ஆசையின்றிப் பண்பாடாக வாழும் வாழ்க்கையிலே மதபோதனைகளை போதிக்க வேண்டுமென்கிறார்.
நூற்றுக்குத் தொண்ணூறு பேர் லௌகீக வாழ்க்கையின் இச்சைக்கு ஆட்பட்டு வாழ விரும்புகிறார்கள்.
தொல்லைகளையும் துன்பங்களையும் காணும் போது, அவர்கள் வேதனை அடைகிறார்கள்.
அந்த வேதனையைச் சாக்காகக் கொண்டு, `அவர்களை வீட்டைவிட்டு ஓடு’ என்று போதிப்பது, என்ன நியாயம் என்று கேட்கிறார்.
அவர் கூறுகிறார்:
“உபத்திரவங்களும் இடுக்கண்களும் ஜீவிதத்தில் பூரணமாக இல்லாமற் போவதென்பது நடக்காத காரியம்; இயற்கைக்கும் மாறானது; உண்மையில், அவை நமது மேன்மைக்காகவே ஏற்பட்டவை. அவை நோயாளிக்கு ஆரோக்கியம் உண்டாவதற்காகக் கசப்பு மாத்திரைகள் கொடுப்பது போலாகும். மிக உயர்ந்த நல்ல வஸ்துவானாலும், சரியான முறையில் உபயோகப் படுத்தக்கூடாது போனால், உபத்திரவங்களை விளைவிக்கும். துன்பங்களின் விஷயமும் இப்படியே. எவற்றையும் சரியான காலத்தில், சரியான முறையில், சரியாக உபயோகித்தால், நாளடைவில் அவை நற்பலனை அளிப்பது திண்ணம்.
உண்மையில் துன்பங்களே நமக்கு மேன்மையான வழிகாட்டிகள். அவற்றால் நமது மார்க்கம் செம்மைப்படுகிறது. சாமானிய வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள மனிதனுக்கு அவனைச் சரியான முறையிலிருக்கச் செய்யத் துன்பங்கள் மிகவும் உதவியாயிருக்கும். குடும்பக் கஷ்டங்களையும் உலக வாழ்க்கையிலுண்டாகும் துயரங்களையும் பற்றி எனது குருநாதர் இப்படிச் சொல்வதுண்டு. `நமது இல்லமே அமைதியும் பொறுமையும் அடைய நாம் பயிலுமிடம். கிருஹஸ்தாச்ரமத்தில் நாம் படும் வறுமை, இடுக்கண்களைப் பதறாது பொறுப்பது நாம் இயற்றும் பெருந்தவம். இதனிலும் உயிரிய தவம் வேறொன்றுமில்லை. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் நாம் என்ன செய்ய வேண்டுமென்றால், கோபத்திற்காவது துக்கத்திற்காவது இடங்கொடாமல், குறைகூறும் மனப்பான்மையை ஒழித்து நமது குற்றத்திற்காகவே நாம் அனுபவிக்கிறோம் என்று நினைத்து, சாந்த மனத்துடன் பொறுமையாய் இருக்கவேண்டும்.
காட்டில் தனித்த வாழ்வும், உலக விஷயங்களில் கலக்காது விலகி நிற்றலும் சிலருக்குப் பொறுமையையும், அமைதியையும் பழகச் சாதனங்களாகும். ஆனால் நமக்குப் பந்துமித்திரர்களின் இகழ்ச்சியும், சுடுசொற்களும் அரிய பெரிய தவத்திற்கொப்பாகி வெற்றிக்கு ஒப்பற்ற சாதனங்களாகின்றன.’
“உண்மையில் துன்பங்களையும் சடங்குகளையும் நாம் அமைதியுடன் பொறுத்தோமேயாகில், அவை நம்மை மேம்பாட்டடையச் செய்து, மேல்நிலைகளுக்குச் செல்வதற்கு வேண்டிய முக்கிய சாதனங்களாகும். அங்ஙனம் அல்லாது முரணான வழியில் உபயோகித்தோமேயாகில், நற்பலன் அழிந்துபோய் நாமடையவிருக்கும் ஆதாயம் கெட்டுப் போகும்.”
“பரித்தியாகம், அதாவது பற்றுதலற்ற தன்மை ஒரு முக்கிய நிலை என்பதில் சந்தேகமில்லை. பற்றற்றாலன்றி மாயையின் சிக்கல்களிலிருந்து தப்பமுடியாது. ஆனால் நாம் மனையை விட்டகன்று, குடும்பம் லௌகீக விஷயங்களெல்லாவற்றையும் புறக்கணித்துத் துறவு பூண்டு சந்நியாசியாக வேண்டியதில்லை. இல்லறமும் இல்வாழ்க்கையும் துறந்து உலக பந்தங்களை விட்டுவிட்டு, ஏகாந்தத்தை நாடி நிற்பதே பற்றற்றுப் போவதற்கு ஒரே சாதனம் என்னும் கொள்கையை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பலாத்கார முறையில் சர்வசங்க பரித்தியாகம் செய்வது நிஜமானதன்று. ஏனெனில் உலகத்தைத் துறந்துவிட்டாற் போலத் தோன்றினாலும் கூட, உட்கருத்தில் அவர்கள் உலகத்தைப் பற்றியே நிற்கக் கூடும்.
இல்லற வாழ்க்கையில் நாம் அநேக விஷயங்களைக் கவனிக்க வேண்டுமென்பதற்கு சந்தேகமில்லை. சம்சாரத்தைத் தாங்க வேண்டும். மக்களின் கல்விக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவர்கள் வேண்டுவனவற்றையும், அவர்களை வெப்பம், குளிர், நோய், துன்பங்கள், மற்றெல்லாவற்றிலிருந்தும் காப்பாற்ற வேண்டும். இப்படி முக்கியமாக வேண்டியவற்றிற்காக நாம் பணமும் ஆஸ்தியும் சம்பாதிக்கிறோம்.”
“இப்படி நாம் சம்பந்தப்பட்டுள்ள விஷயங்களில் அளவு கடந்து பற்றுதல் கொள்வதே உண்மையில் தீமையாகும். இதுவே நமது இடுக்கண்களுக்கு முக்கியக் காரணம். ஆனால், விருப்பு வெறுப்பற்று நமது கடமை என்று நாம் காரியங்களைச் செய்வோமாகில், உலகப் பற்றுதல்களினின்று ஒருவாறு விலகியவராகி, அநேக உடைமைகளைப் படைத்து அவற்றைக் கையாளுபவராயிருப்பினும், உண்மையில் உலகைத் துறந்தவராகிறோம். இத்தன்மையில் உடைமைகள் பலவானால் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள தர்மத்தைச் செய்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளவை என்பதும் தெளிவாகும்.
சங்க பரித்தியாக மென்பதற்கு உலகப் பற்றற்றுப் போதல் என்பது உண்மையான பொருளாம். உடைமைகள் இல்லாது போவதென்பது பொருளாகாது. ஆகையால், இன்றியமையாதவாறு ஆஸ்திகளைப் பெற்று உலகத்துடன் சம்பந்தம் கொண்டுள்ள இல்லற வாழ்க்கையை, விஷயங்களில் அளவுக்கு மிஞ்சிய பற்றற்று நடத்தினால், பரித்தியாகத்திற்கு, அதன் விளைவான சத்திய நிலை எய்துவதற்கும் இவை தடையாக மாட்டா.”
“எண்ணற்ற மகான்கள் ஆயுள் முழுவதும் இல்லற வாழ்க்கையை நடத்திக் கொண்டே மகா உன்னதமான பூர்ணத்துவத்தை அடைந்திருக்கின்றனர். பரித்தியாகம் என்பது மனத்தின் உள்நிலை. அது வஸ்துகளின் நிலையற்றதும் மாறுபடுவதுமான தன்மையை உணர்த்துவதோடு அவற்றின்மேல் அவிச்சையை உண்டுபண்ணும். மேலும் நித்தியமானதும், மாறுபாடே இல்லாததுமான சத்தியத்தின் மேலேயே நோக்கம் நிலைத்து, விருப்பு, வெறுப்பு என்னும் உணர்ச்சிகளுமற்றுப் போகும். உண்மையான வைராக்கியம் (Renunciation) என்பது இதுவே.”
“நமது மனத்தின்கண் இந்தப் பாவம் ஏற்பட்டதும் நமக்குப் பற்றற்றுப் போகும். கிடைத்த மட்டும் திருப்தியடைந்திருப்போம். பற்றற்றுப் போகவே, ஸம்ஸ்காரங்கள் உண்டாவது நின்று போகும். இப்பொழுது எஞ்சியுள்ளது ஏதெனில், இதுவரை சேமித்த ஸம்ஸ்காரங்களை ஜீவிதத்தில் அனுபவித்துக் கழிப்பதே. பிரகிருதியும் ஸம்ஸ்காரங்களை காரண சரீரத்துடன் அனுபவித்துத் தீர்த்துக் கொள்வதற்காகத் தக்க இடத்தைச் சிருஷ்டி செய்து நமக்கு உதவி செய்யும். இப்படியாகப் புரைகள் கரைந்து போனதும், நாம் சூக்ஷ்மரூபம் அடைந்து நிற்கின்றோம்.”
“நமது எண்ணங்களையும் செயல்களையும் அடக்குவதற்கு சதா ஒலித்துக் கொண்டேயிருக்கும் மனம் சரியான முறையில் வேலை செய்கின்றதா என்பதை கவனிக்க வேண்டும். மதபோதகர்கள் மிக்க கசந்த வார்த்தைகளால், மனதைக் கடிந்து தூஷித்து, அதற்கு கெட்ட பெயர்கள் எல்லாம் இட்டு, அதை நமது பெரிய விரோதி என்று பழிப்பதைப் பலமுறை கேட்டிருக்கின்றேன். இதன் காரணம் வெட்ட வெளிச்சமாகத் தெரியும். அவர்கள் நம்மிலுள்ள தீமைகள் எல்லாவற்றிற்கும் மனமே காரணம் என்று நினைக்கிறார்கள். அதன் காரணமாக மனம் போன போக்கே போகாது, அதை நசுக்கிவிட வேண்டுமென்று ஜனங்களுக்குப் புத்தி புகட்டுவர். ஆனால் ஜனங்கள் மனத்தின் கவனத் தன்மையைக் கட்டுப்படுத்தவோ, அதன் சொற்படி கேளாதிருக்கவோ முடியாமல் இருக்கின்றனர்.”
“கோட்பாடுகளைச் சார்ந்து சொல்லப்பட்ட புத்திமதிகளும் உபந்நியாசங்களும் கொஞ்சமும் உபயோகப்படுவதில்லை. உபந்நியாசங்களைக் கேட்ட எவரும் மனமடக்குதல் என்பதை நடைமுறையில் அடைந்ததேயில்லை. மேலும் தற்காலச் சூழ்நிலைகளும், சந்தர்ப்பங்களும், மனத்தை மேன்மேலும் சலிக்கச் செய்கின்றன. இக்காலத்தில் ஒவ்வொருவரும் ஜீவிதம் நடப்பதே கடும் போரெனவும், வறுமை, பாதுகாப்பில்லாமை, இடுக்கண்கள், போட்டிகள் என்னுமிவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றின் விளைவினின்று தாம் விலகி நிற்க முடியாதென்றும் நினைப்பர். இதனால் எப்போதும் அமைதியின்மையும், மனசஞ்சலமும் ஏற்படும். இந்தப் பாவம் நமது சுவாசத்திலும் கலந்து உட்சென்று சூழ்நிலை சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப இழுத்துச் செல்லும். நமது தனிமையானது காற்றுக் காட்டிபோல் நமது பாதம் போகும் போக்கிலேயே போகும் தனது தைரிய சாகஸங்களால். இதை எவன் எதிர்த்து நின்று பாதிக்கப் படாமல் தன்னைக் காத்துக் கொள்கிறானோ அவனே தீரன்”.
ஸ்ரீராம்சந்த்ரஜியின் இந்தக் கருத்தை நான் முழு மனத்தோடு ஒப்புக் கொள்கிறேன்.
இந்தத் தொடர் கட்டுரையின் ஆரம்பக்கட்டத்திலேயே இதை நான் கூறியிருக்கிறேன்.
வாழ்க்கையை வாழ்க்கையாக ஒப்புக் கொண்டு, துன்பங்கள் வந்தே தீரும் என்பதைப் போதித்து, வருகிற துன்பங்களை எப்படிச் சமாளிப்பது என்று யோசனையும் சொன்னால், சராசரி மனிதனுக்கு அது வழி காட்டும்.
மதத்தின்மீது பற்றுதலையும் ஏற்படுத்தும்.
நான் படித்தவரை, பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுளை அடையும் வழி என்று சொன்னவை எல்லாம் முழுக்க முழுக்கப் பந்தபாசங்களை அறுத்தெறிந்து விட்டு வாழ்வது பற்றியனவாகவே இருக்கின்றன.
குடும்ப வாழ்க்கையை நடத்திக் கொண்டே ஒருவன் யோகியாக முடியும்; மகான் ஆக முடியும்; முக்தியடையவும் முடியும். அதற்கான வழியை இந்துமத போதகர்கள் அதிகம் சொல்லவில்லை என்பதே என் கருத்து.
வள்ளுவன் அதை வலியுறுத்தியிருக்கிறான்.
இல்லறத்தில் துறவறம் என்ற தலைப்பில் சொன்னவர்கள் கூட ஒரு கட்டத்தில் மனைவியைத் தாய்போலப் பாவிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
உடல் இச்சைகளிலிருந்து விடுபடச் சொல்லியிருக்கிறார்கள்.
ஸ்ரீராம்சந்தரஜி எதிலிருந்தும் விடுபடச் சொல்லவில்லை. அதற்கு ஒரு அளவை நிர்ணயித்து கொள்ளச் சொல்லுகிறார்.
அந்த அளவு என்பது ஏறக்குறையத் திருக்குறளை ஒட்டியே இருக்கிறது.
பகவத் கீதையில் பரந்தாமன் கூறும் மனத்தின் சமநிலையே, வள்ளுவரும் ஸ்ரீராம்சந்த்ரஜியும் வலியுறுத்தும் அளவாகும்.
இன்பங்களையே அனுபவிக்காமல், ஒருவன் துறவு பூண்டால், அந்த இன்பத்தை நோக்கியே அவன் மனம் ஓடிக் கொண்டிருக்கும்.
அவன் எந்தக் காலத்திலும் முழு ஞானம் பெற முடியாது.
அனுபவித்து ஞானம் பெற்றவர்கள்தான் தலைசிறந்த ஞானிகளாகக் காட்சியளிக் கிறார்கள்.
பற்றற்ற வாழ்க்கை என்பதற்கு ஸ்ரீராம்சந்தரஜி கொடுக்கும் விளக்கத்தை நவநாகரிக இளைஞர்கள் கூட விரும்பி ஏற்றுக் கொள்ளுவார்கள்.
சத்தியம் உதயமாவதற்குத் தத்துவரீதியாகவும் பிரத்தியட்சக் கண்ணோட்டத்திலும் அவர் சொல்லும் வழிகளைச் `சத்யோதயம்’ என்ற நூல் தெளிவாக விவரிக்கின்றது.
இந்நூலைக் கல்லூரிகளில் பாடப் புத்தகமாக வைப்பதுக் கூட பொருத்தமானது என்பது என் கருத்து.
இந்தத் தமிழ் நூல் கிடைக்குமிடம்: ஸ்ரீராமசந்த்ரமிஷன், ஷாஜகான்பூர். (உ.பி.)

நன்றி :- கவியரசு கண்ணதாசன்


No comments:

Post a Comment