Monday, January 31, 2011

அர்த்தமுள்ள இந்துமதம் II - 02



02. சாதிகள்
“இந்து சமய வரலாற்றின் மிக ஆரம்ப காலத்தில் இந்து சமூகமானது பல நிலைகளாகப் பகுக்கப்பட்டு அமைந்திருந்ததையே விளக்கும் வகையில், சாதி முறையானது அமைந்திருந்தது.
பழங்குடி மக்கள் என்ற அடிப்படையிலும், செய்தொழில் அடிப்படையிலும், சாதி முறையானது அமைந்ததில் ஏற்பட்ட குழப்பமானது கண்டிப்பான நியதிகளில் ஒன்றாகப் பழங்குடி மக்களுடைய பழக்க வழக்கங்கள் பித்தியேகமாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான காரணதாயுள்ளது. சாதிமுறை அமைப்பினுடைய சமூக அம்சத்தைப் பார்க்கும்பொழுது அந்த அமைபானது மனிதர்களால் உருவாக்கப்பட்டதே தவிர, அது தெய்வீக அமைப்பின் மர்மமாக அமைந்துவிடவில்லை. மக்களிடையே காணப்பட்ட உண்மையான வேற்றுமைகளுக்கு ஏற்பவும், இலட்சியமான வகையில் அமைய வேண்டிய ஒற்றுமைக்காகவும், மனித சமுதாயத்தினை நெறிப்படுத்தி அமைப்பதற்காகவே, சாதி முறையானது அமைக்கப்பட்டது.
மிகப் பெரிதோர் அமைப்பினுடைய பல்வேறு அம்சங்களாகச் சமூகத்தினுடைய பல்வேறு பகுதிகளும் கருதப்பட்டது பற்றி, முதல் முதலா ‘புருஷசூக்தம்’ எனும் நூலில் ஜாதிமுறை அமைப்புப் பற்றிக் குறிப்பிடப்பட்டுக் காணப்படுகிறது.
மனித சமுதாயமானது பல்வேறு உறுப்புகளுடன் கூடிய ஒரு முழுமைப்பொருளாகவும், அதனுடைய ஒவ்வோர் அங்கமும் தனக்கான பொறுப்புக்களையும் உடமைகளையும் சரிவர நிறைவேற்றுவதன் மூலமாகப் பிற அங்கங்களும் தம்முடைய பொறுப்புகளையும் கடமைகளையும் செவ்வனே நிறைவேற்றுவதற்கு உதவியும், பிற அங்கங்கள் தம்முடைய பொறுப்புகளையும் கடமைகளையும் செவ்வனே நிறைவேறி வரக்கூடிய காரணத்தால், தன்னுடைய பொறுப்புகளையும் கடமைகளையும் செவ்வனே நிறைவேற்றும் வகையில், பல அம்சங்களும் ஒன்றை மற்றது இயல்பாச் சார்ந்து அமையும் வகையில் அமைந்துள்ளன.
இந்த கண்ணோட்டத்துடன் பார்ப்போமேயானால் முழுப் பொருளினுடைய தன்மையானது அதனுடைய பலவேறுபட்ட அங்கங்கள் ஒவ்வொன்றிலும் அதனுடைய பலவேறு அங்கங்கள் ஒவ்வொன்றும் இன்றியமையாததாகவும் உள்ளன. ஒரு சமூகத்தினுடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றி வரக்கூடிய பல பிரிவுகளுடனும் கூடிச் சமூகங்கள் அனைத்தும் அமைந்து காண்கின்றன. பல்வேறு பிரிவுகளும் பொதுவானதோர் இலட்சியத்தை எய்தும் வகையில் செயலாற்றக்கூடிய காரணத்தால், அவற்றினிடையே ஒற்றுமையுணர்வும் சமூக சகோதரத்துவமும் நன்கு மருவுகின்றன. முதல் பிரிவாக பண்பாட்டின் வளர்ச்சிக்காகவும் ஆன்மீகத்தின் உயர்வுக்காகவும் முதலாவது பிரிவில் ஈடுபட்டவர்களையும், இர்ண்டாவது பிரிவாகப் போர்த்துறையிலும் ஆரசியலிலும் ஈடுபட்டுள்ளவர்களையும், மூன்றாவது பிரிவாகப் பொருளாதாரத் துறையிலும் வர்த்தகத்திலும், வாணிபத்திலும் ஈடுபட்டு உள்ளவர்க்களையும், நான்காவது பிரிவாகத் தேர்ச்சி பெறாத தொழிலாளிகளையும் உழைப்பாளிகளையும் கொண்டு ஆக இந்த நான்கு பிரிவுகளையும் கொண்டு, சாதி அமைப்பானது அமைந்தது.
மனித வாழ்க்கையினுடைய பல்வேறு கடமைகளும் மிகத் தெளிவான வகையில் புகுத்தப்பட்டும், அவற்றினுடைய பிரத்தியேகமான இயல்புகளும், எவ்வகையில் அவை பிறவற்றுடன் ஒருங்கே இயங்கினால் அதன் விளைவாக நிறைவு காண முடியும் எனும் நோக்குடன், அவை ஒவ்வொன்றினுடைய சிறப்பியல்புகளும் தெளிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு சாதிக்கும் சமூகத்தில் ஆற்ற வேண்டிய குறிப்பாக ‘பணியும், கடமையும்’ அது அனுசரிக்க வேண்டிய நியதியும், அதற்கான தனிப்பட்ட பாரம்பரியமும் உள்ளன. உணவியல் பற்றியும், திருமண இயல் பற்றியும் சில முறைகளைக் கையாண்டும், ஓரளவு பரம்பரை வழிவந்த பழக்க வழக்கங்களை மேற்கொண்டும் பல்வேறு பிரிவுகளும் ஒன்றுக்கொன்று இயைந்து ஒற்றுமையுடன் கூடி வாழ்ந்து வரக்கூடிய ஒரு கூட்டு நிறுவன் போன்றது தான், சாதிமுறை அமைப்பு ஆகும்.
ஒவ்வொரு பிரிவும் பிற பிரிவுகளுடைய ஈடுபாடும் தலையீடுமின்றித் தனிப்பட்ட கையில் தம்முடைய இலட்சியங்களையும் குறிக்கோள்களையும் எய்தும் முயற்சியில் பூரண சுதந்திரமுடனும், சுயேச்சையாகவும் இயங்குவதற்குக் கூடிய வழிவகைகள் உள்ளன. பல்வேறு சாதிகளிடையே பல்வேறுபட்ட கடமைகளும் முழு அமைப்பினுடைய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அனைத்தும் கருதப்பட்டன. வேத நூல்களில் காணக்கூடிய உயரிய கருத்துக்களைப் பிறருக்கு எடுத்துக் கூறவேண்டிய அமைதியும், போர்க்களத்தில் சமர்புரியும் வீரனுடைய வீரமும் திறனும், வர்த்தக வாணிபத்தில் ஈடுபட்டுள்ளவருடைய மன நேர்மையும், தொழிலாளியின் பொறுமையுணர்வும் உழைப்புத் திறனும், இவையனைத்தும் சமுதாயத்தின் நல்வளர்ச்சிக்கு வழிகோலுகின்றன. இந்த அம்சங்கள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட முறையில் தனிப்பட்டதொரு நிறைவுநிலை என்பது ஒன்று உண்டு.
-மேலே நீங்கள் படித்தது டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்களுடைய கருத்துரையாகும்.
‘இந்து தர்மமும் வாழ்க்கையும்’ என்று நூலில், அவர் இவ்வாறு கூறுகிறார்.
அவரது தெளிவான கருத்தை அறிந்துகொள்ள முடியாதவாறு, அந்த நூலை மொழிபெயர்த்தவர் கொடுமையான தமிழைக் கையாண்டிருக்கிறார். ஆயினும் அவருடைய தமிழையே நான் மீண்டும் மொழிப்பெயர்த்து ஓரளவு புரிந்துகொண்டேன்.
“சாதிப் பிரிவு என்பது நாட்டுக்குத் தேவையான நான்கு அம்சங்களைக் கொண்டது” என்கிறார் ராதா கிருஷ்ணன்.
1. ஆன்மிகத் துறை
2. அரசியல், போர்த்துறை
3. வாணிபம்-தொழில்துறை
4. தொழில்களை இயக்கும் தொழிலாளிக் துறை.

நான்கு வருணங்களாக அமைக்கப்பட்டன என்பது டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாதம்.

அவர் மட்டுமல்லாது, இந்து மதச் சான்றோர்களின் வாதமும் அதுதான்.
காழ்ப்புணர்ச்சியின்றி, ஆத்திரமின்று, த்த்துவ ரீதியாக இதை நாம் ஆராய வேண்டும்.
மேற்கண்ட நான்கு பிரிவுகளையும், சாதிப் பிரிவுகள் என்று அழைப்பதை நான் ஒப்புக்கொள்வதில்லை.
ஒவ்வொரு வருணத்திற்குள்ளும் பல்வேறு சாதிகள் இருக்கின்றன. ஆதலால், இந்த நான்கு பெரும் பிரிவுகளும் சாதிப் பிரிவுகள் ஆகமாட்டா.
முதலில், இந்த நான்கு அங்கங்களாகப் பிரித்து, ஒன்றை ஒன்று அனுசரித்து வாழும் முறையை இந்துமதம் உருவாக்கியது.
ஆன்மிகத் துறையில் ஈடுபட்ட முதற்பிரிவினர். எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கையை உண்டாக்கவும், நீதி நியாயங்களைப் போதிக்கவும், வழிகாட்டவும் உருவாக்கப்பட்டன.
இரண்டாவது பிரிவினர், அரசியலில் ஈடுபடவும், நாட்டை நிர்வகிக்கவும், பகைவரிடமிருந்து நாட்டைக் காக்கவும் உருவாக்கப்பட்டனர்.
மூன்றாவது பிரிவினர், வாணிபம் நடத்தவும் பொருளீட்டி நாட்டின்செல்வத்தை வளர்க்கவும் உருவாக்கப்பட்டனர்.
இந்த மூன்று துறைகளிலும் பயிற்சியற்றவர்கள், உடல் உழைப்பாளிகளாக இருந்து தொழில்களை இயக்கவும், கட்டடங்கள் கட்டவும் பயன்படுத்தப்பட்ட நான்காவது பிரிவினரானார்கள்.
இந்த நாட் பிரிவுகளுக்குக்குள்ளேயுமே, அன்றைய மொத்த சமுதாயமே அடங்கி விடுகிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும்.
நாகரிக உலகத்தின் விஞ்ஞான வளர்ச்சி தோன்று முன்பு நாடுகள் எந்த நிலையில் இருந்தனவோ, அந்த நிலையைக் கணக்கெடுத்தே இந்தப் பிரிவுகள் வகுக்கப்படன.
அந்த நாளில் பிரம்மப்பிரிவைச் சேர்ந்தவன் ஆன்மிகத்துறையில் மட்டுந்தான் ஈடுப்பட்டான்.
க்ஷத்திரியன் அரசியலிலும் போரிலும் மட்டுந்தான் ஈடுபட்டான்.
வைசியன் வாணிபத்தில் மட்டும்தான் ஈடுபட்டான்.
(சூத்திரன் என்றால் ‘இழிமகன்’ என்று இந்து மதம் கூறுவதாக ஒரு பொய்யான வாதம் பலருடைய மனத்தைப் புண்படுத்தியிருக்கிறது
இந்த மதத்தையோ, ‘சூத்திரன்’ என்ற வார்த்தையையோ சரியாகப்புரிந்து கொள்ளாத எவனோ இட்டுக்கட்டி உரைத்த உரை இது.)
‘சூத்திரம்’ என்றால், இயக்கப்படுவதற்கான ‘இலக்கணம்’ என்று பொருள்.
‘சூத்திரன்’ என்றால் ‘இயக்குகிறவன்’ என்று பொருள்.
(சூத்திரதாரி என்ற வார்த்தையின் மரூஉ. அது.)
ஆக அந்த நாளையச் சமுதாய அமைப்பின்படி, இந்த நான்கு வருணங்கள் பிரிக்கப்பட்டன.
காலங்களால் சமுதாய அடிப்படை மாறி, அவரவர் ஏற்றுக்கொண்ட பணிகளும் மாறிவிட்டன.
மேற்கூறிய நாட்பெரும் பிரிவைச் சேர்ந்தவர்களும் எல்லாத் தொழில்களிலும் காணப்படுகிறார்கள்.
ஆன்மிகத் துறையில் அனந்தராம தீட்சிதர் மட்டும் இல்லை கிருபானந்தவாரியாரும் இருக்கிறார்.
வாணபத் துறையில் ஈடுபடாத சாதிகளே இல்லை.
அதுபோல உடல் உழைப்பிலும் எல்லாப் பிரிவினரும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஆகவே, இந்து சமயம் தோற்றுவித்த வருணங்களின் நோக்கமே அடிபட்டுப் போய்விட்டது.
தாங்கள் மேற்சாதி என்று உயர்ந்த மனப்பன்மை கொண்டவர்களும், தாங்கள் கீழ்ச்சாதி என்ற தாழ்வு மனப்பான்மைக் கொண்டவர்களும், இன்று வெகுவாக்க் குறைந்துவிட்டார்கள்.
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே

என்றபடி, ஹரிஜன் ஒருவர் கலெக்டராக இருக்க அவரக்குக்கீழே பிராமணர் ஒருவர் தாசில்தாராக இருப்பது இன்று சர்வ சகஜம்.
இந்துமதம் பிரித்த பிரிவுகள் தொழில் நோக்கம் மட்டுமே கொண்டவை.
ஆகவே இன்றைய மாறதல்களையும் வளர்ச்சியையும் இந்து மதம் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறது.
தீண்டாமை என்பதும், தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்பதும், வெறுப்பின் அடிப்படையிலே தோன்றிய சாதிப் பிரிவுகளாக இந்து மதத்தின் மூல வேதங்கள் எவையும் கூறவில்லை.
நாடார், முதலியார், நாயக்கர், செட்டியார் என்ற சாதிப்பெயர்களெல்லாம் அந்த நாளில் ஒவ்வொரு துறையில் பங்காளிகளாக இருந்தவர்கள், தங்களுக்கு இட்டுக் கொண்ட பட்டப்பெயர் அல்லது குடும்பப்பெயர்களே!
இந்தச் சாதிப்பெயர் எதையும் இந்து வேதங்களில் காண முடியாது.
காலப்போக்கில், அவ்வப்போது தோன்றிய உபன்யாசிகள், அவரவர் மனப்போக்கின்படி உருவாக்கிய பேதங்கே அன்றி, இவை இந்து மதம் உருவாக்கிய பேதங்கள் அல்ல.
இன்றைய சமுதாய அமைப்பின்படி, இந்த நான்கு வருணங்களைத் தொழில் முறையில் பிரிக்க முடியாது.
காலத்தைக கொண்டு கவிதையை ஆராய்வது போலத்தான் மதத்தையும் ஆராய வேண்டும்.
அந்நாளைய சமுதாய அமைப்புத்தான் எந்நாளும் இருந்தாக வேண்டும் என்று இந்துமதம் வற்புறுத்தவில்லை.
ஆகவே வெறுப்பின் மீது கட்டப்பட்ட எந்தக் கட்டடமும், இந்து மதத்தால் உருவாக்கப்பட்டதல்ல என்பது உறுதி.
இந்த பேதங்களை உருவாக்கியவர்கள், தீண்டாமையை உருவாக்கியர்கள், முற்பிரிவினர்கள் தான் என்ற பொய் வாதத்தைத் தகர்க்க, அதே பிரிவினர் தான் அவற்றை ஒழிப்பதிலும் ஈடுபட்டார்கள் என்பதை தேசிய போராட்ட காலத்தில் நான் கண்டிருக்கிறோம்.
இடைக்காலத்தில் வந்த சாதிகள், நம் தலைமுறையிலேயே மறையத் தலைப்பட்டிருப்பது, ‘நாம் நல்ல காலத்தில் வாழ்கிறோம் என்பதைக் காட்டுவதோடு, இந்து மதத்தின் மீது சுமத்தப்பட்ட களங்கத்தையும் துடைத்து வருகிறது.
நன்றி :- கவியரசு கண்ணதாசன்


1 comment:

  1. பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,
    அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்.

    கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்

    அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
    ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
    ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
    அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
    வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்


    - கவிஞர் கோ கண்ணதாச



    திருவடி தீக்ஷை(Self realization)

    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
    நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


    Please follow

    (First 2 mins audio may not be clear... sorry for that)
    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk

    http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo



    Online Books
    http://www.vallalyaar.com/?p=409



    http://sagakalvi.blogspot.com/


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி

    ReplyDelete