Wednesday, July 28, 2010

திருநெல்வேலி - நெல்லையப்பர் ஆலயம்

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஆச்சரியமான பல சிற்பங்களை உள்ளடக்கிய ஆலயம். வெளியிலிருந்து பார்க்கும் போது சிறிய கோயிலாயிருக்குமென எண்ணினால் அது எவ்வளவு பெரிய தவறு என உள்ளே நுழைந்ததுமே உணரவைக்கும். 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆலயம்.

தமிழகத்துக்கே உரித்தான கட்டிடக்கலை அம்சத்துடன் பல சிறப்புகள் வாய்ந்தது இத்திருக்கோவில். இங்குள்ள இசைத்தூண்கள் இத்திருக்கோவிலுக்கான தனி அடையாளம்.



தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சிவசபைகளில் இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப் பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப் பட்டுள்ளது. இக்கோயிலில் நெல்லையப்பர் என்கிற பெயரில் மூலவரும், காந்திமதி என்கிற பெயர் அம்பாளும் வீற்றிருக்கின்றனர். புராணகாலத்தில் இவ்வூர் வேணுவனம் என்றே அழைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும் அதில் நடைபெறும் சுவாமி அம்பாள் திருகல்யாணமும் கண்கொள்ளாக் காட்சியாகும்.

சிவபெருமானுக்கும், காந்திமதி தாயருக்கும் திருமணம் நடந்த போது, கன்னி தானம் செய்ய திருமால் திருநெல்வேலிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இத்திருக்கோவிலைச் சுற்றியுள்ள ஊர்களிலேயே நவதிருப்பதி என்றழைக்கப்படும் ஒன்பது தளங்கள் உள்ளன.






கோயிலின் மூலக்கதை

முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.

அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது



ஊர்ப்பெயர்க் காரணம்

முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக விளங்கினவராக திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பெற்ற நெல்லை சன்னதி முன் உலரப் போட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது.

குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழைத் தண்ணீரில் நெல் நனைந்துவிடப் போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு அசந்தார்.

மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சர்யப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காணவிரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் அசந்தார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். அதுபோல் அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி எனவும் மாற்றியமைத்தார். திருநெல்வேலி என்ற பெயர் வருவதற்கும் இச்சம்பவமே காரணமாக அமைந்தது என்றும் கூறப்படுகிறது.






கோயில் அமைப்பு

§ ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.

§ கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

§ இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான் தாமிர சபைஉள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

§ மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. மீண்டும் அம்மா மண்டபம் வழியாகத் திரும்பி வந்தால், மூன்றாவது பிரகாரத்தை அடையலாம். இல்லையெனில் அம்மன் சந்நிதியில் இருந்து அப்படியே வெளியேறவும வழி உண்டு. கோயிலின் உள்ளே மிகப் பெரிய உள் தெப்பம் ஒன்று உள்ளது. இது போல் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது.

சீபலி மண்டபப் பிரகாரத்தில் உள்ள ஆறுமுக நயினார் விக்கிரகம் ஒரே கல்லில் மயில் வாகனத்தோடும், தேவியர்களோடும் விளங்குவது தமிழரின் சிற்பக்கலைக்கு சிறந்த சான்று.






சிறப்புக்கள்

§ சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது.

§ சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று.

§ திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற புகழ்மிக்க தலமாக விளங்குகிறது

§ அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்தில் பாடப்பெற்ற பெருமையுடையது.,

§ சொக்கநாபிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது.

§ 32 தீர்த்தங்கள் கொண்டது இத்திருத்தலம்

அம்மன் கோயிலும், சுவாமி கோயிலும் முதலில் முழுதுகண்ட இராமபாண்டியனாலும், பின்னர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் நின்றசீர் நெடுமாறனாலும் கட்டப்பட்டது. சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், சோமவார மண்டபம், ஊஞ்சல் மண்டபம் இவற்றின் அமைப்பு பழங்காலத் தமிழர் சிற்பக்கலைச் சின்னமாகும்.
சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் வீடாக இத்திருக்கோவில் அழைக்கப்படுகிறது. இத்திருக்கோவிலுக்கு அருகில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.


கல்வெட்டுகள்:

மிகப் பழமையான கல்வெட்டு கி.பி 950 ல் இருந்த வீரபாண்டியன் சாசனங்கள் ஐந்து. இவை வட்ட எழுத்தில் எழுதப்பட்டவை. கல்வெட்டுகள் பாண்டியர்கள் சோழர்களை வென்றதாகச் சொல்கிறது.










No comments:

Post a Comment