Monday, January 31, 2011

அர்த்தமுள்ள இந்துமதம் II - 02



02. சாதிகள்
“இந்து சமய வரலாற்றின் மிக ஆரம்ப காலத்தில் இந்து சமூகமானது பல நிலைகளாகப் பகுக்கப்பட்டு அமைந்திருந்ததையே விளக்கும் வகையில், சாதி முறையானது அமைந்திருந்தது.
பழங்குடி மக்கள் என்ற அடிப்படையிலும், செய்தொழில் அடிப்படையிலும், சாதி முறையானது அமைந்ததில் ஏற்பட்ட குழப்பமானது கண்டிப்பான நியதிகளில் ஒன்றாகப் பழங்குடி மக்களுடைய பழக்க வழக்கங்கள் பித்தியேகமாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான காரணதாயுள்ளது. சாதிமுறை அமைப்பினுடைய சமூக அம்சத்தைப் பார்க்கும்பொழுது அந்த அமைபானது மனிதர்களால் உருவாக்கப்பட்டதே தவிர, அது தெய்வீக அமைப்பின் மர்மமாக அமைந்துவிடவில்லை. மக்களிடையே காணப்பட்ட உண்மையான வேற்றுமைகளுக்கு ஏற்பவும், இலட்சியமான வகையில் அமைய வேண்டிய ஒற்றுமைக்காகவும், மனித சமுதாயத்தினை நெறிப்படுத்தி அமைப்பதற்காகவே, சாதி முறையானது அமைக்கப்பட்டது.
மிகப் பெரிதோர் அமைப்பினுடைய பல்வேறு அம்சங்களாகச் சமூகத்தினுடைய பல்வேறு பகுதிகளும் கருதப்பட்டது பற்றி, முதல் முதலா ‘புருஷசூக்தம்’ எனும் நூலில் ஜாதிமுறை அமைப்புப் பற்றிக் குறிப்பிடப்பட்டுக் காணப்படுகிறது.
மனித சமுதாயமானது பல்வேறு உறுப்புகளுடன் கூடிய ஒரு முழுமைப்பொருளாகவும், அதனுடைய ஒவ்வோர் அங்கமும் தனக்கான பொறுப்புக்களையும் உடமைகளையும் சரிவர நிறைவேற்றுவதன் மூலமாகப் பிற அங்கங்களும் தம்முடைய பொறுப்புகளையும் கடமைகளையும் செவ்வனே நிறைவேற்றுவதற்கு உதவியும், பிற அங்கங்கள் தம்முடைய பொறுப்புகளையும் கடமைகளையும் செவ்வனே நிறைவேறி வரக்கூடிய காரணத்தால், தன்னுடைய பொறுப்புகளையும் கடமைகளையும் செவ்வனே நிறைவேற்றும் வகையில், பல அம்சங்களும் ஒன்றை மற்றது இயல்பாச் சார்ந்து அமையும் வகையில் அமைந்துள்ளன.
இந்த கண்ணோட்டத்துடன் பார்ப்போமேயானால் முழுப் பொருளினுடைய தன்மையானது அதனுடைய பலவேறுபட்ட அங்கங்கள் ஒவ்வொன்றிலும் அதனுடைய பலவேறு அங்கங்கள் ஒவ்வொன்றும் இன்றியமையாததாகவும் உள்ளன. ஒரு சமூகத்தினுடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றி வரக்கூடிய பல பிரிவுகளுடனும் கூடிச் சமூகங்கள் அனைத்தும் அமைந்து காண்கின்றன. பல்வேறு பிரிவுகளும் பொதுவானதோர் இலட்சியத்தை எய்தும் வகையில் செயலாற்றக்கூடிய காரணத்தால், அவற்றினிடையே ஒற்றுமையுணர்வும் சமூக சகோதரத்துவமும் நன்கு மருவுகின்றன. முதல் பிரிவாக பண்பாட்டின் வளர்ச்சிக்காகவும் ஆன்மீகத்தின் உயர்வுக்காகவும் முதலாவது பிரிவில் ஈடுபட்டவர்களையும், இர்ண்டாவது பிரிவாகப் போர்த்துறையிலும் ஆரசியலிலும் ஈடுபட்டுள்ளவர்களையும், மூன்றாவது பிரிவாகப் பொருளாதாரத் துறையிலும் வர்த்தகத்திலும், வாணிபத்திலும் ஈடுபட்டு உள்ளவர்க்களையும், நான்காவது பிரிவாகத் தேர்ச்சி பெறாத தொழிலாளிகளையும் உழைப்பாளிகளையும் கொண்டு ஆக இந்த நான்கு பிரிவுகளையும் கொண்டு, சாதி அமைப்பானது அமைந்தது.
மனித வாழ்க்கையினுடைய பல்வேறு கடமைகளும் மிகத் தெளிவான வகையில் புகுத்தப்பட்டும், அவற்றினுடைய பிரத்தியேகமான இயல்புகளும், எவ்வகையில் அவை பிறவற்றுடன் ஒருங்கே இயங்கினால் அதன் விளைவாக நிறைவு காண முடியும் எனும் நோக்குடன், அவை ஒவ்வொன்றினுடைய சிறப்பியல்புகளும் தெளிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு சாதிக்கும் சமூகத்தில் ஆற்ற வேண்டிய குறிப்பாக ‘பணியும், கடமையும்’ அது அனுசரிக்க வேண்டிய நியதியும், அதற்கான தனிப்பட்ட பாரம்பரியமும் உள்ளன. உணவியல் பற்றியும், திருமண இயல் பற்றியும் சில முறைகளைக் கையாண்டும், ஓரளவு பரம்பரை வழிவந்த பழக்க வழக்கங்களை மேற்கொண்டும் பல்வேறு பிரிவுகளும் ஒன்றுக்கொன்று இயைந்து ஒற்றுமையுடன் கூடி வாழ்ந்து வரக்கூடிய ஒரு கூட்டு நிறுவன் போன்றது தான், சாதிமுறை அமைப்பு ஆகும்.
ஒவ்வொரு பிரிவும் பிற பிரிவுகளுடைய ஈடுபாடும் தலையீடுமின்றித் தனிப்பட்ட கையில் தம்முடைய இலட்சியங்களையும் குறிக்கோள்களையும் எய்தும் முயற்சியில் பூரண சுதந்திரமுடனும், சுயேச்சையாகவும் இயங்குவதற்குக் கூடிய வழிவகைகள் உள்ளன. பல்வேறு சாதிகளிடையே பல்வேறுபட்ட கடமைகளும் முழு அமைப்பினுடைய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அனைத்தும் கருதப்பட்டன. வேத நூல்களில் காணக்கூடிய உயரிய கருத்துக்களைப் பிறருக்கு எடுத்துக் கூறவேண்டிய அமைதியும், போர்க்களத்தில் சமர்புரியும் வீரனுடைய வீரமும் திறனும், வர்த்தக வாணிபத்தில் ஈடுபட்டுள்ளவருடைய மன நேர்மையும், தொழிலாளியின் பொறுமையுணர்வும் உழைப்புத் திறனும், இவையனைத்தும் சமுதாயத்தின் நல்வளர்ச்சிக்கு வழிகோலுகின்றன. இந்த அம்சங்கள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட முறையில் தனிப்பட்டதொரு நிறைவுநிலை என்பது ஒன்று உண்டு.
-மேலே நீங்கள் படித்தது டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்களுடைய கருத்துரையாகும்.
‘இந்து தர்மமும் வாழ்க்கையும்’ என்று நூலில், அவர் இவ்வாறு கூறுகிறார்.
அவரது தெளிவான கருத்தை அறிந்துகொள்ள முடியாதவாறு, அந்த நூலை மொழிபெயர்த்தவர் கொடுமையான தமிழைக் கையாண்டிருக்கிறார். ஆயினும் அவருடைய தமிழையே நான் மீண்டும் மொழிப்பெயர்த்து ஓரளவு புரிந்துகொண்டேன்.
“சாதிப் பிரிவு என்பது நாட்டுக்குத் தேவையான நான்கு அம்சங்களைக் கொண்டது” என்கிறார் ராதா கிருஷ்ணன்.
1. ஆன்மிகத் துறை
2. அரசியல், போர்த்துறை
3. வாணிபம்-தொழில்துறை
4. தொழில்களை இயக்கும் தொழிலாளிக் துறை.

நான்கு வருணங்களாக அமைக்கப்பட்டன என்பது டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாதம்.

அவர் மட்டுமல்லாது, இந்து மதச் சான்றோர்களின் வாதமும் அதுதான்.
காழ்ப்புணர்ச்சியின்றி, ஆத்திரமின்று, த்த்துவ ரீதியாக இதை நாம் ஆராய வேண்டும்.
மேற்கண்ட நான்கு பிரிவுகளையும், சாதிப் பிரிவுகள் என்று அழைப்பதை நான் ஒப்புக்கொள்வதில்லை.
ஒவ்வொரு வருணத்திற்குள்ளும் பல்வேறு சாதிகள் இருக்கின்றன. ஆதலால், இந்த நான்கு பெரும் பிரிவுகளும் சாதிப் பிரிவுகள் ஆகமாட்டா.
முதலில், இந்த நான்கு அங்கங்களாகப் பிரித்து, ஒன்றை ஒன்று அனுசரித்து வாழும் முறையை இந்துமதம் உருவாக்கியது.
ஆன்மிகத் துறையில் ஈடுபட்ட முதற்பிரிவினர். எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கையை உண்டாக்கவும், நீதி நியாயங்களைப் போதிக்கவும், வழிகாட்டவும் உருவாக்கப்பட்டன.
இரண்டாவது பிரிவினர், அரசியலில் ஈடுபடவும், நாட்டை நிர்வகிக்கவும், பகைவரிடமிருந்து நாட்டைக் காக்கவும் உருவாக்கப்பட்டனர்.
மூன்றாவது பிரிவினர், வாணிபம் நடத்தவும் பொருளீட்டி நாட்டின்செல்வத்தை வளர்க்கவும் உருவாக்கப்பட்டனர்.
இந்த மூன்று துறைகளிலும் பயிற்சியற்றவர்கள், உடல் உழைப்பாளிகளாக இருந்து தொழில்களை இயக்கவும், கட்டடங்கள் கட்டவும் பயன்படுத்தப்பட்ட நான்காவது பிரிவினரானார்கள்.
இந்த நாட் பிரிவுகளுக்குக்குள்ளேயுமே, அன்றைய மொத்த சமுதாயமே அடங்கி விடுகிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும்.
நாகரிக உலகத்தின் விஞ்ஞான வளர்ச்சி தோன்று முன்பு நாடுகள் எந்த நிலையில் இருந்தனவோ, அந்த நிலையைக் கணக்கெடுத்தே இந்தப் பிரிவுகள் வகுக்கப்படன.
அந்த நாளில் பிரம்மப்பிரிவைச் சேர்ந்தவன் ஆன்மிகத்துறையில் மட்டுந்தான் ஈடுப்பட்டான்.
க்ஷத்திரியன் அரசியலிலும் போரிலும் மட்டுந்தான் ஈடுபட்டான்.
வைசியன் வாணிபத்தில் மட்டும்தான் ஈடுபட்டான்.
(சூத்திரன் என்றால் ‘இழிமகன்’ என்று இந்து மதம் கூறுவதாக ஒரு பொய்யான வாதம் பலருடைய மனத்தைப் புண்படுத்தியிருக்கிறது
இந்த மதத்தையோ, ‘சூத்திரன்’ என்ற வார்த்தையையோ சரியாகப்புரிந்து கொள்ளாத எவனோ இட்டுக்கட்டி உரைத்த உரை இது.)
‘சூத்திரம்’ என்றால், இயக்கப்படுவதற்கான ‘இலக்கணம்’ என்று பொருள்.
‘சூத்திரன்’ என்றால் ‘இயக்குகிறவன்’ என்று பொருள்.
(சூத்திரதாரி என்ற வார்த்தையின் மரூஉ. அது.)
ஆக அந்த நாளையச் சமுதாய அமைப்பின்படி, இந்த நான்கு வருணங்கள் பிரிக்கப்பட்டன.
காலங்களால் சமுதாய அடிப்படை மாறி, அவரவர் ஏற்றுக்கொண்ட பணிகளும் மாறிவிட்டன.
மேற்கூறிய நாட்பெரும் பிரிவைச் சேர்ந்தவர்களும் எல்லாத் தொழில்களிலும் காணப்படுகிறார்கள்.
ஆன்மிகத் துறையில் அனந்தராம தீட்சிதர் மட்டும் இல்லை கிருபானந்தவாரியாரும் இருக்கிறார்.
வாணபத் துறையில் ஈடுபடாத சாதிகளே இல்லை.
அதுபோல உடல் உழைப்பிலும் எல்லாப் பிரிவினரும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஆகவே, இந்து சமயம் தோற்றுவித்த வருணங்களின் நோக்கமே அடிபட்டுப் போய்விட்டது.
தாங்கள் மேற்சாதி என்று உயர்ந்த மனப்பன்மை கொண்டவர்களும், தாங்கள் கீழ்ச்சாதி என்ற தாழ்வு மனப்பான்மைக் கொண்டவர்களும், இன்று வெகுவாக்க் குறைந்துவிட்டார்கள்.
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே

என்றபடி, ஹரிஜன் ஒருவர் கலெக்டராக இருக்க அவரக்குக்கீழே பிராமணர் ஒருவர் தாசில்தாராக இருப்பது இன்று சர்வ சகஜம்.
இந்துமதம் பிரித்த பிரிவுகள் தொழில் நோக்கம் மட்டுமே கொண்டவை.
ஆகவே இன்றைய மாறதல்களையும் வளர்ச்சியையும் இந்து மதம் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறது.
தீண்டாமை என்பதும், தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்பதும், வெறுப்பின் அடிப்படையிலே தோன்றிய சாதிப் பிரிவுகளாக இந்து மதத்தின் மூல வேதங்கள் எவையும் கூறவில்லை.
நாடார், முதலியார், நாயக்கர், செட்டியார் என்ற சாதிப்பெயர்களெல்லாம் அந்த நாளில் ஒவ்வொரு துறையில் பங்காளிகளாக இருந்தவர்கள், தங்களுக்கு இட்டுக் கொண்ட பட்டப்பெயர் அல்லது குடும்பப்பெயர்களே!
இந்தச் சாதிப்பெயர் எதையும் இந்து வேதங்களில் காண முடியாது.
காலப்போக்கில், அவ்வப்போது தோன்றிய உபன்யாசிகள், அவரவர் மனப்போக்கின்படி உருவாக்கிய பேதங்கே அன்றி, இவை இந்து மதம் உருவாக்கிய பேதங்கள் அல்ல.
இன்றைய சமுதாய அமைப்பின்படி, இந்த நான்கு வருணங்களைத் தொழில் முறையில் பிரிக்க முடியாது.
காலத்தைக கொண்டு கவிதையை ஆராய்வது போலத்தான் மதத்தையும் ஆராய வேண்டும்.
அந்நாளைய சமுதாய அமைப்புத்தான் எந்நாளும் இருந்தாக வேண்டும் என்று இந்துமதம் வற்புறுத்தவில்லை.
ஆகவே வெறுப்பின் மீது கட்டப்பட்ட எந்தக் கட்டடமும், இந்து மதத்தால் உருவாக்கப்பட்டதல்ல என்பது உறுதி.
இந்த பேதங்களை உருவாக்கியவர்கள், தீண்டாமையை உருவாக்கியர்கள், முற்பிரிவினர்கள் தான் என்ற பொய் வாதத்தைத் தகர்க்க, அதே பிரிவினர் தான் அவற்றை ஒழிப்பதிலும் ஈடுபட்டார்கள் என்பதை தேசிய போராட்ட காலத்தில் நான் கண்டிருக்கிறோம்.
இடைக்காலத்தில் வந்த சாதிகள், நம் தலைமுறையிலேயே மறையத் தலைப்பட்டிருப்பது, ‘நாம் நல்ல காலத்தில் வாழ்கிறோம் என்பதைக் காட்டுவதோடு, இந்து மதத்தின் மீது சுமத்தப்பட்ட களங்கத்தையும் துடைத்து வருகிறது.
நன்றி :- கவியரசு கண்ணதாசன்


அர்த்தமுள்ள இந்துமதம் II - 01



01.இதிகாசங்கள்
லௌகிக வாழ்க்கையின் சகல பகுதிகளையும் உள்ளடக்கி, ஒரு பெருங்கதை எழுதக்கூடிய சக்தி இன்று எந்த எழுத்தாளருக்காவது உண்டா?
நாகரிகம் வளர்ந்துவிட்ட நிலையில், ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையே உள்ள தூரம் குறைந்துவிட்ட நிலையில், பல நாட்டுக் கதைகளையும் படிக்கின்ற வாய்ப்பு அதிகப்பட்ட நிலையில், நம் மூதாதையர்களைவிட நாம் அறிஞர்கள் என்று கருதுகின்ற நிலையில், சகலவிதமான குணாதிசயங்களைக்கொண்டு பல பாத்திரங்களை உருவாக்கி ஒரே கதையாக எழுதுகின்ற சக்தி இன்று யாருக்காவது உண்டா? எனக்குத் தெரிந்தவரை இல்லை.
நம்முடைய இதிகாசங்களை வெறும் கற்பனைக் கதைகள் என்றே வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கற்பனைக்கு ஈடு கொடுக்க உலகத்தில் இன்னும் ஓர் எழுத்தாளன் பிறக்கவில்லை.
பெருங்கதைகளும் அவற்றுக்குள் உப கதைகளுமாக எழுதப்பட்ட நமது இதிகாசங்களின் பாத்திரப் படைப்புத்தான் எவ்வளவு அற்புதம்!
அவை கூறும் வாழ்க்கைத் தத்துவங்கள்தான் எத்தனை!
நம்பிக்கை
அவநம்பிகை
ஆணவம்
மீட்சி
காதல்
ராஜதந்திரம்
குறுக்குவழி
நட்பு
அன்பு
பணிவு
பாசம்
கடமை

- இப்படி வாழ்க்கையில் எத்தனை கூறுகள் உண்டோ அத்தனையும் நமது இதிகாசங்கள் காட்டுகின்றன.
பொறுமைக்குத் தருமன்
மகாபாரதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

துடிதுடிப்புக்குப் பீமன்
ஆண்மைக்கும் வீரத்திற்கும் அர்ச்சுனன்.

மூத்தோர் வழியில் முறை முறை தொடர நகுலன், சகாதேவன்
பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கிக்கொண்ட சக்தி மிக்க ஆன்மாவாக, பாஞ்சாலி.
உள்ளதெல்லாம் கொடுத்து, கொடுப்பதற்கு இல்லையே என்று கலங்கும் வள்ளலாகக் கர்ணன்.
நேர்மையான ராஜதந்திரத்திற்கு எடுத்துக்காட்டாகக் கண்ணன்.
குறுக்குவழி ராஜதந்திரத்திற்கு ஒரே உதாரணமாகச் சகுனி!

தீய குணங்களின் மொத்த வடிவமாக கௌரவர்கள்!

தாய்பாசத்திற்கு ஒரு குந்தி!
நேர்மையான கடமையாளனாக விதுரன்.
பாத்திரங்களின் சிருஷ்டியிலேயே சம்பவங்கள் கருக்கொண்டுவிட்டன.
இந்தப் பாத்திரங்களின் குணங்களை மட்டும் சொல்லி விட்டால் கதை என்ன என்பது தற்குறிக்கும் புரியும்.
இந்தக் கதை வெறும் ஆணவத்தின் அழிவை தருமத்தின் வெற்றியை மட்டும் குறிப்பதல்ல.
லௌகிக வாழ்க்கையிலும் ஒவ்வொருவருக்கும் பயன்படக்கூடிய படிப்பினை இருக்கிறது.
கதையின் இறுதிக் களமான குருஷேத்திரத்தில் கதையின் மொத்த வடிவத்திற்கும் தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதுவரை சொல்லி வந்த நியாயங்கள் தொகுத்து வழங்கப்படுகின்றன.
பகவத் கீதை, மகாபாரதக் கதையின் சுருக்கமாகி விடுகிறது.
அரசியல் சமுதாய நீதிக்கு அதுவே கைவிளக்காகி விடுகிறது.
கண்ணனை நீ கடவுளாகக் கருத வேண்டாம்.
கடவுள் அவதாரம் எடுப்பார் என்பதையே நம்ப வேண்டாம்.
பரந்தாமன், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டவன் என்றே எண்ணிப்பார்.
கீதையைத் தேவநீதியாக நீ ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், மனித நீதியாக உன் கண்முன்னால் தெரியும்.
கண்ணன் வெறும் கற்பனைதான் என்றால், கற்பனை சிருஷ்டிகளில் எல்லாம் அற்புத சிருஷ்டி, கண்ணனின் சிருஷ்டி.
ஊழ்வினை பற்றித் தெரிய வேண்டுமா? - பாரதம் படி.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமா? - பாரதம் படி.
ஒன்றை நினைத்தால் வேறொன்று விளையுமா? - பாரதம் காட்டும்.
செஞ்சோற்றுக் கடனா? நன்றியறிதலா? - பாரதம் காட்டும்.
பெற்ற மகனைத் தன் மகன் என்று சொல்ல முடியாத பாசக்கொடுமையா? - குந்தியைப் பார்.
ரத்த பாசத்தால் உன் உள்ளம் துடிக்கிறதா? சொந்தச் சகோதரர்களை எதிர்த்துப் போராட வேண்டிவருகிறதா? அப்போது உனக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லையா? - கீதையைப் படி.
ஏழைக்கும் பணக்காரனுக்கும் நட்பு இருக்கமுடியுமா?
-கண்ணன் கதைக்கு உபகதையான குசேலன் கதையைப் படி.
விஞ்ஞானம் வளராத காலத்தில், போர்த்துறையில் எத்தனை வகையான ராஜதந்திரங்கள் இருந்தன.
அத்தனையும் ஒட்டுமொத்தமாக அறிந்துகொள்ள மகாபாரதம் படி.
ஒரு பாத்திரத்திற்கு ஒரு குணம் விசேஷம் என்றால், அதைக் கதையின் இறுதிவரையில் கொண்டு செலுத்திய கறபனைச் சிறப்பை அளவிட வார்த்தைகள் இல்லை.
ராம கதைக்கு வா!
காதல் என்றால் என்ன என்பதைக் காட்டக் கூடிய இலக்கியம் அதற்குமேல் ஒன்றில்லை.
சகோதரப் பாசம் ராமனுக்கும், லட்சுமணனுக்கும், பரதனுக்குமிடையே முழு வடிவில் சதுராடுகிறது.
குகனைப்போல் ஒரு நண்பன் கிடைத்தால்,நான் இருந்த இடத்தில் இருந்தபடியே கோட்டைகளைப் பிடிப்பேன்.
அனுமானைப் போன்ற ஓர் ஊழியன் கிடைத்தால், அகிலத்தையே விலைக்கு வாங்குவேன்.
சீதையைப் போன்று ஒரு தேவதை கிடைத்தால், கம்பனோடும் போட்டி போடுவேன்.

விபீஷணனைப் போன்ற ஒரு நியாயவன் கிடைத்தால், இன்றைய ஜனநாயகத்திற்கு நான் மரியாதை செலுத்துவேன்.

பாரதத்திற்குக் கர்ணனைப்போல் இதிலே செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் கும்பகர்ணன், நன்றிகெட்ட உறவுகளுக்கு ஒரு சவால்!
கோசலையைப் போல் ஒருதாயும், தசரதனைப் போல் ஒரு தந்தையும் யாருகும் அமைந்துவிட்டால், கொடிய வறுமைக்கூட தோன்றாது.!
இவ்வளவு நல்லவர்களாகக் கொண்ட ராம கதையை இரண்டே தீயவர்கள் நடத்திச் செல்கிறார்கள்.
முதல் பகுதியைத் தள்ளிவிடுகிறாள் மந்தரை. இரண்டாவது பகுதியை ஏற்று நடத்துகிறான் ராவணன்.
ஆயிரம் நல்லவர்களுக்கு அவதியைத் தர, இரண்டு மூன்று தீயவர்கள் போதுமென்றது ராம கதை.
மந்தரையும், சூர்ப்பநகையும், ராவணனுந்தாம் ராமனுக்குத் தெய் வடிவம் தருகிறார்கள்.
நிழல் அருமை வெயிலிலே நின்று அறியப்படுகிறது.
வைணவ இதிகாச சிருஷ்டி இப்படி வானோங்கி நிற்பது கண்டு, சைவர்கள் சிருஷ்டித்ததே முருகன் கதை.
அங்கே வில்;
இங்கே வேல்!
அங்கே ராமன்;
இங்கே முருகன்!
அங்கே ராவணன்;
இங்கே சூரபத்மன்!
அங்கே ராவணனுக்குச் சில தம்பிகள்.
இங்கே சூரபத்மனுக்குச் சில தம்பிகள்.

இரண்டிலும் ஏறத்தாழ ஒரே வகையான பாத்திரப் படைப்புகள்.
(விவரமாக் தெரிந்துகொள்ள திரு ரா.பி. சேதுப்பிள்ளையின் ‘வேலும் வில்லும்ய படியுங்கள்)
ஆயினும், வைணவர்களின் அற்புதக் கற்பனையைச் சைவர்கள் வெல்ல முடியவில்லை!
சைவர்கள் பெரும்பாலும் நாமாவளியாகவே பாடி இருக்கிறார்கள்.
“ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று” என்று இருக்கின்ற முகங்களுக்குக் கணக்குக் சொன்னார்களே தவிர ஆழ்ந்த தத்துவங்களை அதன் மூலம் உணர்த்த வில்லை.
ஆண்டாள் திருப்பாவையைப் படித்தாற்கூட நமக்கு மெய்சிலிர்க்கிறது.
மனித ஆன்மாவின் தெய்வீக ராகத்தை அது மெய் சிலிர்க்கக் காட்டுகிறது.
அஃதன்றியும், கடவுளைக் காதலனாக பாவிப்பது என்ற சம்பிரதாயத்தை முதலில் துவக்கியது வைணவந்தான்.
பிறகு சைவமும் அதைப் பின்பற்றியது.
சைவத்திலும், முருகனையும் பரமசிவனின் வேறு சில வடிவங்களையும், காதலனாகப் பாவிப்பது வழக்கில் வந்தது.
ஆனால் சக்தியையோ, பிற பெண் தெய்வங்களையோ காதலியாகப் பாவிப்பதாக இல்லை. அங்கேயும் இந்துக்கள் பண்பாடு காத்தார்கள்.
காதல் என்பது பாசத்தின் முதிர்ச்சியாகவே காட்டப்பட்டது.
சில இடங்களில் காம உணர்ச்சி அதிகரித்து இருந்தால் அது பரிபூரண நிலையைக் குறிக்கும்.
ஆதிமூலத்தோடு இரண்டறக் கலந்துவிட்ட தெய்வீக நிலையைக் குறிக்கும்.
வேறு எந்த மதத்தவரும், இந்துக்களைப் போல் இறைவனோடு நேரடியாகப்பேசுவதில்லை.
உனக்கு ஏன் மாடு என்றும், வீடு கிடையாதா என்றும், தாய் தகப்பன் இல்லையா என்றும், அதனால் தான் ஒருவன் வில்லால் அடித்தானா என்றும், ஏதோ நீண்ட நாள் பிரிந்திருந்த சொந்தக்காரர்களைக் கேட்பது போல, இறைவனைக்கேட்பவர்கள் இந்துக்கள்தான்.
இறைவனுக்கும் மனிதனுக்கும் அதிக இடைவெளியில்லாமல் சிருஷ்டித்தவர்களும் இந்துக்கள்தான்.
மூலமாக முளைத்தெழுந்தவனை உறவினன் ஆக்கிக் கொண்டவர்களும் இந்துக்கள்தான்.
காதல் வாழ்க்கையையும் திருமண வாழ்க்கையையும் கடவுளிடம் கண்டவர்கள் இந்துக்கள்தான்.
ஸ்தூலத்தை சிவமாகவும் ஆன்மாவை சக்தியாகவும் கண்டவர்கள் இந்துக்கள்தான்.
கடைசி ஏழைக்கும் கடவுளைச் சொந்தக்காரனாக அவனை ஆண்டியாகக் கொண்வர்களும் இந்துக்கள்தான்.
அந்தத் தமிழக இந்துக்களிலே சைவர்கள், முருகனைத் தமிழனாக கண்டார்கள்.
சைவர்கள் அவனைத் தமிழனாகக் கண்டபோது, வைணவர்கள் திருமாலைத் தமிழாலேயே அழைத்தனர்.
சைவர்கள் ‘ஸ்ரீரங்கம்’ என்று சொன்னால், வைணவர்கள் அதைத் தமிழில் ‘திருவரங்கம்’ என்று சொல்லுவார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஆன்மாவும் ஆதூலமும் ஆனந்தமாக ஆடிப்பாட வேண்டாம் என்பதே இந்துக்களின் நோக்கமாக இருந்தது.
அந்த நோக்கத்தின் வடிவங்கள்தான் சைவ நடராஜரும் வைணவக் கண்ணனும்.
எங்கே தொட்டாலும், எதைப் படித்தாலும், இந்துக்கள் உருவாக்கிய பாத்திரங்கள் நம்மை வெறும் அதீத உலகத்திற்கு கொண்டு போகவில்லை.
லௌகிக உலகத்தை எடுத்துக் காட்டுகின்றன.
கதைகளைப் பொய் என்று சொல்ல்லாம்.
அந்தக் கற்பனையின் சிறப்பை வியக்காமலிருக்க முடியாது.
சொல்லப்போனால், அத்தகைய கற்பனை, உலகத்தில் இந்தப் பல்லாயிரம் ஆண்டுகளில் வேறு எவனுக்கும் கிடையாது.
நன்றி :- கவியரசு கண்ணதாசன்


Friday, January 14, 2011

பொங்கல் வாழ்த்துக்கள்





இனிய பொங்கல் திருநாளில்,
மகிழ்ச்சியும் மனஅமைதியும் பெருகட்டும்.
ஆரோக்கியமும் செல்வமும் பொங்கட்டும்.
எங்கும் சாந்தி நிலவட்டும்
பொங்கல் வாழ்த்துக்கள்.





Thursday, December 30, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2011




மனதில் உறுதி வேண்டும்,
வாக்கினிலே இனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,  
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்;



இவையனைத்தும் அனைவரும் பெற்று 

வாழ்வில் வெற்றி காண எனது மனமார்ந்த 

 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.









Sunday, December 26, 2010

அர்த்தமுள்ள இந்துமதம் I - 24

24. பாவிகளே பிராத்தியுங்கள்
(இது எல்லாப் பாவிகளுக்கும் அல்ல; அப்பாவிகளுக்கும் மட்டும்!)
எங்கள் இறைவா!

மூல முதல்வனே!
அகல் விளக்குகள் ஒளிவிடும் உன் சந்நிதியில் நாங்கள் மண்டியிடுகிறோம்.

தாழ்ந்து கிடந்த எங்கள் கரங்கள் மேலெழுகின்றன.
இருகை கூப்பி வணங்குகிறோம்.
கூப்பிய கரங்களுக்குள் எந்த ஆயுதமும் மறைத்து வைக்கப்படவில்லை என்று கூறுகிறோம்.
சலனமற்ற கண்களையும், சபலமற்ற உள்ளத்தையும் எங்களுக்குக் கொடு.
கடந்த காலங்களில் நாங்கள் செய்த தவறுகளை மன்னித்துவிடு.
சூன்யத்தில் பிறந்த இதயம் வளர வளரக் காட்சிக்கு வருவது நியதி. ஆனால் எங்கள் இதயம் வளரவில்லை.
அது வளர்ச்சிக்குப் பிறகும் சூன்யமாகவே இருந்தது.
கைக்கோலை நழுவவிட்ட குருடன் கருந்தேளைப் பிடிப்பது போல் ஆன்மீக உணர்ச்சியை மறந்துவிட்ட நாங்கள் பாபத்தில் சிக்கினோம்.
அறிந்தோ, அறியாமலோ செய்த எங்கள் குற்றங்களை ஆதி நாயகனே மன்னித்துவிடு.
நாங்கள் அமுதென்று எண்ணி, நஞ்சை அருந்தினோம்.
மலரென்று எண்ணி முட்களைச் சூடினோம்.
எங்கள் கடிவாளம் ஆசையின் கையிலிருந்ததால் எங்கள் பயணத்தையும் ஆன்மா நடத்த முடியவில்லை.
ஆசை அழைத்த வழி சென்றோம்; தண்டனை கிடைத்த பிறகுதான் தவறுகளை உணர்ந்தோம்.
மலத்திலே கால் வைத்தபோது, அது மலமென்று எங்களுக்குத் தெரியவில்லை.
கையினால் தொட்டுப் பார்த்தபோதும் கண்டு கொள்ள முடியவில்லை.
மூன்றாவது, மூக்கிலே வைத்தபோதுதான் முழுதும் புரிந்தது.
இவை ஒரு முட்டாள் செய்யும் காரியங்களல்ல.
நாங்கள் நடந்து சென்ற இருட்காட்டில் எங்கள் அறிவுச் சுடர் எரியவில்லை.
காற்றை மட்டுமே நம்பிப்போகும் பாய்மரப் படகுபோல், அசையை மட்டுமே நம்பி எங்கள் வாழ்க்கைப் படகு போய்விட்டது.
நாங்கள் பிறர் மனை நயந்திருந்தால் அது எங்கள் பெண்ணாசையின் குற்றம்.
நாங்கள் பிறர் பொருள் விழைந்திருந்தால் அது எங்கள் பொன்னாசையின் குற்றம்.
நாங்கள் பிறர் நிலம் கவர்ந்திருந்தால் அது எங்கள் மண்ணாசையின் குற்றம்.
ஆசைகளை சிருஷ்டித்து, அந்த விளையாட்டில் எங்களைச் சிக்க வைத்து, வேடிக்கை பார்த்த எங்கள் பரம்பொருளே!
நிலைக்கும் என்று நாங்கள் எண்ணியவையெல்லாம் நிலையாதனவென்று இப்போது அறிந்தோம்.
மரத்திலிருந்து உதிர்ந்து விழுந்த சருகுகள், பசுமை இலைகளைப் பார்த்து ஏங்குவது போல்,பாவிகளாகிய நாங்கள் உத்தமமான ஞானிகளைப் பார்த்து, அப்படியே நாமும் வாழக்கூடாதா என்று ஏங்குகிறோம்.
அந்த வாழ்க்கையை, ஏ, ஹரிஹரனே எங்களுக்கு அருள்வாயாக!
சமைக்கப்பட்ட சேவல் கூவ முடியாதென்பது எங்களுக்குத் தெரியும்.
முழுக்க தன்னைத் அழித்துக்கொண்டுவிட்ட மனிதன் உன்னை வேண்ட முடியாது என்பதும் எங்களுக்குத் தெரியும்.
நாங்கள் முழுக்க எங்களை அழித்துக்கொள்ள வில்லை.
பாதி வழியிலேயே எங்களுக்குக் கண் திறந்துவிட்டது.
எங்கள் இறகுகள் தான் பறிக்கப்பட்டிருகின்றன.
நாங்கள் கொல்லப்படவும் இல்லை.சமைக்கப்படவுமில்லை.
இந்த நிலையில் ஏ,ஏசுநாதா!
எங்கள் இறகுகள் மறுபடியும் வளர அனுமதி.
கண்ணென்பது நல்லவற்றைக் காணுவதற்காகவும், செவி என்பது நன்மொழிகளைக் கேட்பதற்காகவும், நாசி என்பது நறுமணங்களை நுகர்வதற்காகவும் , வாய் என்பது நல்ல சேதிகளைச் சொல்வதற்காகவும், கை என்பது உதவி பெறத் தகுதியுள்ளவர்களுக்கு உதவுவதற்காகவும், கால் என்பது நல்லோரை நோக்கி நடப்பதற்காகவும் என்பதை நாங்கள் அறியாமற் போனோம்.
இந்த அங்கங்களில் ஒன்று அறியாமல் பிழை செய்திருந்தால் ஏ, ஆனந்த மூர்த்தியே! அந்த அங்கங்களைத் தண்டிக்காமல் விட்டுவிடு.
‘தீர்க்கப்பட முடியாத நோய் எங்களுக்கு வராதவாறு, திருத்தாண்டவ மூர்த்தியே, எங்களுக்கு அருள் செய்!
மீன், பூச்சியைத் தின்பது பசியால்.
அந்த மீனை நாரை கொத்துவது பசியால்.
அந்த மனிதன் தவறுகள் செய்வதும் பசியால்.
எங்கள் தவறுகளுக்குப் பசி மட்டுமே காரணமாக இருந்தால், உடனடியாக மன்னித்துவிடு.
இந்த ஆசைக்கு அறியாமையே காரணம் என்றால் அந்த அறிவை நாங்கள் அடையாதவாறு தடுத்தது நீதான் என்பதால், நாங்கள் நிம்மதியாக வாழ உடனே அனுமதித்துவிடு.
பலாப்பழத்தில், சுளையைத் தேடி எடுக்க ஒரு கத்தி தேவைப்படுவது போல், லௌகீக வாழ்க்கையில் நியாயத்தைக் கண்டுகொள்ளப் புத்தி தேவைப்படுகிறது.
அந்தப் புத்தி எங்களுக்கு இல்லாமற் போய் விட்டது என்பதைச்சொல்லிக் கொள்ள,நாங்கள் வெட்கப்படவில்லை.
‘ஒரு முட்டாள், தான் முட்டாள் என்பதைக் கண்டு கொள்ளும்போது, அறிவாளியாகி விடுகிறான். என்பது முன்னோர் வாக்கு.
நாங்கள் கண்டுகொண்டுவிட்டோம்.
பரம்பொருளின் சந்நிதானத்தில் எங்கள் பாபங்களைக் கழுவிவிட்டு, நிம்மதியை வாங்கிப்போக வந்திருக்கிறோம்.
இறைவா!
உன் சந்நியதியில் கற்பூரம் ஏற்றப்படுகிறது!
உனக்குச் செய்யப்படும் நெய் வேத்தியத்தில் வாழைப்பழமும் தேங்காயும் வைக்கப்படுகின்றன.
இவை ஏன் என்பதை, இப்போதுதான் நாங்கள் அறிந்துகொண்டோம்.
கற்பூரம் தன்னை அழித்துக்கொள்கிறது.
அது எரிந்து முடிந்த பிற்பாடு ஒரு கரித்தூள் கூட மிஞ்சுவதில்லை. வாழை மட்டை, தண்டு, இலை, பூ, காய், பழம் அனைத்தையும் தந்து உதவுகிறது.
தென்னைமரம் கீற்று, இளநீர், தேங்காய் அனைத்தையும் தந்து உதவுகிறது.
இவற்றில் எந்தப் பாகமும் வீணாவதில்லை.
மனிதனும் அப்படி உலகிற்குப் பயன்பட வேண்டும் என்ற இந்துக்களின் அசையையே இது குறிக்கிறது.
நாங்களோ மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினோம்; நாங்கள் பயன்படவில்லை.
எங்கள் கண்கள் திறந்துவிட்டன்.
நாங்கள் இனி எந்தச் சேவையைச்செய்ய வேண்டுமென்று நீ கனவில் வந்து கட்டளையிடுகிறாயோ, அந்தச் சேவையைச் செய்யக் காத்திருக்கிறோம்.
எங்கள் கனவில் உன்னை எதிர்பார்க்கிறோம்.
லௌகீக வாழ்க்கையாக எவருக்கும் வேதனை இல்லாமல் வேடிக்கையாக நடத்தலாம்’ என்று முதலுதாரணம் காட்டிய ஸ்ரீகிருஷ்ணா!
‘லௌகீக வாழ்க்கையில் சில சட்டதிட்ட வரம்புகள் இருந்தால் காலங் கடந்தாவது வெற்றி வரும்’ என்று நிரூபித்த ஸ்ரீராமர்!
‘ஒழுக்கம் மிகுந்த பக்திக்கு உருவகம் கொடுத்த முருகா!’
‘இவை மூன்றிலும் எதை நீ தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் நானுனக்குத் துணை நிற்பேன் என்று உறுதி கூறும் சிவபெருமானே!’
‘அந்த நால்வர் வழியில் ஒன்றைப் பின்பற்றும் முன்பு, அந்த வழியில் தொல்லையில்லாமலிருக்க அனுமதி வழங்கும், விநாயக்ப் பெருமானே!
இந்துக்களின் பல தெய்வ வணக்கங்கள் எவ்வளவு அர்த்தமுள்ளவை என்பதை நாங்கள் கண்டு கொண்டுவிட்டோம்.
எங்கள் பாவங்களை இங்கே சமர்ப்பிக்கிறோம். மன்னிப்பை எங்கள் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள்.
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் பாகம் ஒன்று முற்றும்..


நன்றி :- கவியரசு கண்ணதாசன்