எழுத்தாளர் ஜெய மோகன் அவர்கள் எழுதிய கட்டுரை இது. ஆதிச்சநல்லூர் பற்றி கூகுளில் தேடும் போது கிடைத்தது. இக்கட்டுரையை படிக்கும் உங்களுக்கு ஆதிச்சநல்லூர் சென்ற அனுபவம் கிடைக்கும்.
சென்ற மார்ச் பதினொன்றாம் தேதி நானும் யுவன் சந்திரசேகரும் மலையாள கவிஞர் கல்பற்றா நாராயணனும் ஈரோடு நண்பர்கள் தங்கமணியும் கிருஷ்ணனும் நவதிருப்பதிகளுக்குச் சென்றபின் திரும்பும் வழியில் கிருஷ்ணாபுரம் பார்த்துவிட்டு ஆதிச்சநல்லூர் செல்வது என முடிவு செய்தோம். ஆதிச்சநல்லூரைப் பற்றி பொதுவாக நண்பர்களிடையே பெரிய புரிதல் இல்லை. சுருக்கமாக தன் முக்கியத்துவத்தை விளக்கினேன்
ஆதிச்சநல்லூர் திருநெல்வேலியில் இருந்து 24 கிமீ தூரத்தில் உள்ள சிறிய கிராமம். தாமிரவருணி இந்த ஊர் வழியாக ஓடுகிறது. ஆனால் நிலம் வளமானதல்ல. இங்கே தாமிரவருணியின் கரையில் ஒரு மேடு இருந்திருக்கிறது. இந்த மேடு ஒரு இடுகாடு. கிமு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய பெருங்கலக் காலகட்ட மக்களின் இடுகாடு இது. தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே.
ஆதிச்சநல்லூர் கண்டுபிடிக்கப்பட்டதே ஒரு ஆர்வமூட்டும் கதை. பதினேழாம் நூற்றாண்டு இஸ்லாமியப் படையெடுப்புகளின்போது நகைகளையும் காசுகளையும் புதைத்து வைக்கும் வழக்கம் உருவானது. பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் புதையல் எடுப்பது ஒரு மனநோய் அளவுக்கு தமிழ்ச் சமூகத்தை பீடித்தது. இவ்வாறு கண்ட இடங்களில் தோண்டிக்கொண்டிருந்த காலத்தில் மேய்ச்சல் மக்கள் இந்தக் குன்றில் இருந்து சில தங்க நகைத்துண்டுகளை தோண்டி எடுத்தனர். பின்னர் இங்கே தேடுதல் வேட்டை ஆவேசமாக நடந்தது.
புதையல்களை பறி முதல் செய்வதில் ஜரூராக இருந்த பரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கவனத்துக்கு இது சென்றது. அவர்களிடமிருந்து புதைபொருள் ஆய்வாளர்கள் களத்துக்கு வந்தார்கள். 1876ல் பிரிட்டிஷ் ஆய்வாளரான அலக்ஸாண்டர் ரெயா இங்கே விரிவான தொல்லியலாய்வுகளை நடத்தினார். தென்னிந்தியாவில் இத்தனை பிரம்மாண்டமான தொல்பொருட்குவியல் எங்குமே கிடைத்தது இல்லை. பல்லாயிரம் பொருட்கள் இங்கே கிடைத்தன. மண்பாண்டங்கள், மண்ணினால் ஆன வீட்டுப்பொருட்கள், மண்சிலைகள், வெள்ளி தங்க நகைத்துண்டுகள் இரும்புக்கருவிகள் என அவை பலவகைப்படும்
உண்மையில் இவற்றின் தொன்மையும் அருமையும் அப்போது முழுமையாக உணரப்படவில்லை. அதற்கு முக்கியமான காரணம் அன்றைய பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் இந்தியப்பெருநிலத்தில் பண்பாடு வெளியில் இருந்துதான் வந்திருக்கவேண்டும் என்ற கோட்பாட்டில் ஆழமாக நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆரிய இனக்கோட்பாடு ஆய்வாளர்களை முழுமையாகவே கவர்ந்திருந்தது. மத்திய ஆசியாவில் இருந்து ஈரான் வழியாக வந்த ஆரியர்களே இந்தியாவில் பண்பாட்டைக் கொண்டுவந்தவர்கள் என்ற நம்பிக்கை ஓங்கி இருந்தது. காரணம் ஐரோப்பியர் தங்களை ஆரிய இனமாக எண்ணி ஆரிய இனமே பண்பாட்டின் ஊற்று என நம்பினர்
ஆதிச்சநல்லூர் சான்றாதாரங்கள் இந்தக் கோட்பாட்டுக்கு நேர் எதிரானவை. அவை மிகத்தொன்மையான ஒரு பண்பாட்டை காட்டின என்பதோடல்லாமல் அந்தப்பண்பாடு மிக வளர்ச்சி கொண்டிருந்தது என்பதையும் காட்டின. அங்கே கிடைத்த மண்பாண்டங்களில் எழுத்துருக்கள் இருந்தன. பல்வேறு இறைவடிவங்கள் இருந்தன. உலோகப்பொருட்கள் மிகநுண்மையாகச் செய்யப்பட்டிருந்தன
பல்வேறு காலகட்டங்களிலாக இங்கே தொடர்ந்து தொல்லியலாய்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள்தாழிகள் கிடைத்துள்ளன. நாலாயிரம் வருடப்பழமை அவற்றுக்கு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஏறத்தாழ 114 ஏக்கர் சுற்றளவில் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தாழிகள் ஒன்றுக்குக் கீழ் ஒன்றாக மூன்று மண்அடுக்குகளில் இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. இது குறைந்தது ஆயிரம் வருடக்காலம் இந்த இடுகாடு பயன்படுத்தப்பட்டிருக்கப் பட்டதன் ஆதாரம்.
இங்குள்ள உலோகப்பொருட்களும் மண்பாண்டங்களின் உற்பத்தியில் உள்ள நேர்த்தியும் அவற்றில் உள்ள எழுத்துக்களும்தான் ஆய்வாளர்கள் மத்தியில் மிகச்சிக்கலான கேள்விகளை எழுப்பி இன்றுவரை தீராத விவாதங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. காலத்தால் ஆதிச்சநல்லூர் சிந்துசமவெளி நாகரீகத்துக்கும் முந்தையதாக இருக்கக் கூடும் என்கிறார்கள். இத்தகைய உயர்தரமான உலோகப்பொருட்கள் இங்கே புழக்கத்தில் இருந்தன என்பதைப் பார்க்கையில் சிந்து சமவெளி நாகரீகத்தைவிட மேலான ஒரு பண்பாடு இங்கே இருந்திருக்கலாம் என்கிறார்கள்
மண்பாண்ட எழுத்துக்கள் பிராமி லிபியினால் ஆனவை என்று சமீபகாலமாக கண்டறிந்துள்ளார்கள். அன்றாடப்புழக்கத்துக்கான மண்பாண்டங்களில் உள்ள எழுத்துக்களைக் காணும்போது அக்காலத்தில் கல்வியறிவு மிகப்பரவலாக இருந்தது என்றும் அது ஒரு நாகரீக சமூகம் என்றும் ஊகிக்கிறார்கள்.
ஆதிச்சநல்லூர் குறித்த ஆய்வுகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தொடங்கப்பட்டாலும் அவை சீராக முன்னெடுக்கபப்டவில்லை என்பதும் ஆதிச்சநல்லூர் திட்டமிட்டே மறைக்கப்பட்டது என்பதும் உண்மை. வரலாறு எப்போதுமே சமகால வரலார்றுஎழுத்தின் தேவைக்கு ஏற்பத்தான் ஆய்வுசெய்யப்படுகிறது. டாக்டர் சத்யார்த்தி அவர்கள் ஆதிச்சநல்லூரில் மேலும் விரிவான ஆய்வுகளைத் தொடங்கி இன்றைய கவனம் அதன் மீது உருவாக வழிவகுத்தவர். 2004 முதல் ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தமிழ் வரலாற்றின் காலக்கணிப்புகளையும் தமிழ்ப்பண்பாட்டின் ஆழத்தையும் பிரமிக்கத்தக்க முறையில் மாற்றியமைக்கும் தன்மை கொண்டவை.
ஆதிச்ச நல்லூருக்கு நாங்கள் நல்ல மதிய வெயிலில் சென்று சேர்ந்தோம். அந்த பெரிய செம்மண்பாறைக் குன்றைச் சென்றடைந்ததும் அங்குமிங்கும் பார்த்தோம். தொல்பொருள்துறையின் அறிவிப்போ வேறு அடையாளங்களோ ஏதும் இல்லை. தடுமாறிக்கொண்டிருந்தபோது ஒரு சிறிய கல்மண்டபத்தில் இருவர் அமர்ந்திருப்பதைக் கண்டோம். வண்டியை நிறுத்தி அவர்களிடம் ஆதிச்சநல்லூர் இதுதானா என்று கேட்டோம்
அதில் ஒரு கிழவர் எழுந்துவந்தார். ஆடுமேய்ப்பவர் என்பதை அவர் வைத்திருந்த வளைந்த அரிவாள்நுனி கொண்ட துரட்டியாலேயே சொல்ல முடிந்தது. தலையில் ஒரு துண்டு. தொடைக்குமேல் கட்டிய அழுக்கு வேட்டி. டயர் செருப்பு. சட்டை இலலத கரிய உடல் மெலிந்து உறுதியாக வெயில்பட்டு காய்ந்து கரிந்து ஒரு காட்டுச்சுள்ளி போல இருந்தது. தங்கமணி இறங்கிச் சென்று விசாரித்தார்
கிழவர் அருகே வந்து ”இதுதான் எடம்…இதுதான் ஆதிச்சநல்லூர்…ஆனா இங்க ஒண்ணுமே கெடையாது. எல்லாத்தையும் மெட்ராஸ¤க்குக் கொண்டு போயிட்டாங்க… எங்கயோ வச்சிருக்காங்க…ஒண்ணுமே இங்க கெடையாது” என்றார். ஏமாற்றமாக ”சரி எடத்தையாவது காட்டுங்க ”என்றேன்
”எதுக்கு இந்த வெயிலிலே” என்றான் யுவன். நான் ”சரி வந்தாச்சுல்ல?” என்றேன். கிருஷ்ணன் ”ஒண்ணுமில்ல சார், வெப்சைட்டுலே எழுதணுமேன்னு போய் பாக்கலாம்னு சொல்றார்” என்றார். ”நான் அதுக்கும்தான், என்ன இப்ப?” என்று இறங்கினேன். கிருஷ்ணனும் பிறரும் கூட்வே வந்தார்கள்.
அங்கே குழிதோண்டியெடுத்த பொருட்களைக் கொண்டுசென்றபின் குழிகளையும் சுத்தமாக மூடிவிட்டார்கள். மூடிய குழிகள் மேலே நடந்தோம் ”இங்கதான் இந்திய நாகரீகமே உருவாகியிருக்கு…மறைக்கிறானுங்க” என்றார் சிதம்பரம். சரிதான் இன்னொரு உள்ளூர் வளவள என்று எண்ணிய கிருஷ்ணன் சற்றே கடுப்பாகி ”ஆமாமா, உலக நாகரீகமே இங்கதான்”என்றார். நான் கிருஷ்ணனின் கையைப்பிடித்து அழுத்தி சும்மா இருக்கச் சொன்னேன். ஏனென்றால் நாகரீகம் என்ற சொல்லை அத்தனை சாதாரணமாக ஒரு கிராமவாசி சொல்ல மாட்டார் என்று தோன்றியது
கிழவர் என்னிடம் ”இதிலே தமிழ் ஆசிரியர் யாராவது உண்டா?”என்றார். இல்லை என்றேன். அவர் பெருமூச்சு விட்டு ”பாத்திஹள்ல? எப்டி போட்டுவச்சிருக்கானுக? ஒரு குறிப்பு உண்டா? ஒரு அடையாளம் உண்டா? எடுத்த பொருட்களை அங்கங்க தொல்பொருள்துறை ஆபீஸ்களிலே பிரிச்சு பதுக்கி வச்சிருக்காங்க. என்ன செஞ்சிருக்கணும், இங்க ஒரு மியூசியம் கட்டியிருக்க வேண்டாமா? இங்க எல்லாத்தையும் வச்சு வேணுங்கிறவன் இங்க வந்து ஆராய்ச்சி செய்யச் சொல்லணும். அப்பதான் இந்த எடத்தோட முக்கியத்துவம் தெரியும். இது எப்பேற்பட்ட எடம் இதோட வரலாறு என்ன எல்லாம் வெளியே தெரியும்….இப்ப ஆதிச்சநல்லூர்னா யாருக்குத் தெரியும்? நான் ஜனாதிபதிக்கு எழுதினேன். கவர்னருக்குஎழுதினேன். கலைஞருக்கு எத்தனையோ மனு கொடுத்திருக்கேன். யாருக்கு அக்கறை? ஒண்ணுமே நடக்கலை”
கிருஷ்ணன் பிரமித்துப் போய்விட்டார். கிழவர் சரசரவென பேசிக்கொண்டே போனார் ”இதுதான் இந்தியாவிலேயே பழமையான தொல்பொருள் எடம். இங்கதான் இந்தியாவிலேயே வளார்ச்சிஅடைஞ்ச நாகரீகமும் கண்டுபிடிச்சிருக்காங்க…இன்னும் முழுசா கண்டுபிடிக்கலை…கண்டுபிடிச்சிட்டே இருக்காங்க…எழுத்துக்களை இப்பதான் கண்டுபிடிக்கிறாங்க…ஏய், தாழிகளிலே நெல்லும் உமியும் இருந்ததே அது என்ன எனம் நெல்லுன்னு கண்டுபிடிச்சியா நீ? அந்த நகையில எப்டி செம்பையும் தங்கத்தையும் கலந்தான்னு கண்டுபிடிச்சியா நீ? இல்ல. இதுவரைக்கும் ஒரு நல்ல ஆராய்ச்சி நடக்கலை…”
”ஏன்? ஏன்னா நாகரீகம்னா அது வடக்கேன்னு வெள்ளைக்காரன் சொல்லிட்டான். அவனுக்கு மூக்கு நீளமான ஈரானிலே இருந்து பண்பாடு வந்ததுன்னு சொல்ல ஆசை. அதுக்கு சிந்து சமவெளி நாகரீகத்தை உசத்திப்பிடிக்கணும்….அப்பவே ஆதிச்சநல்லூரைக் கண்டுபிடிச்சாச்சு. எத்தனை அறிஞர்கள் பேசியிருக்காங்க? பேசலை. அப்டியே விட்டுட்டாங்க. நம்மாளுகளும் அதுக்குமேலே பேசலை. அம்பதுவருடம் ஆதிச்சநல்லூரைப்பத்தி பேச்சே கெடையாது ஐயா…வெளங்குமா? நாடா இது? வெள்ளைக்காரனுக்கு கறுப்பன்னா எளக்காரம் இங்க வந்து பனங்கொட்டை மூஞ்சுற நம்ம பயக்களை போட்டோ பிடிச்சு பேப்பரிலே போட்டு எல்லாரும் ஆதிவாசிகள் இங்க நாகரீகமே கெடையாதுன்னுட்டான். உண்மையா ஒருத்தன் ஆராய்ச்சி செஞ்சா அவனுக்கு தெரியும் ஆதிச்சநல்லூரோட எடம் என்னன்னு…இப்ப வருது…இப்ப ஒண்ணொண்ணா சில ஆய்வுகள்லாம் வருது…அப்டி புதைச்சு வச்சிட முடியாது…”
எனக்கும் அது மிக ஆச்சரியமாக இருந்தது. ஏன் ஆதிச்சநல்லூரில் ஒரு தொல்பொருள் அருங்காட்சியகம் வைக்கக் கூடாது? ஒரு நிரந்தர தொல்பொருள் மையம் இங்கே உண்டு என்றே எண்ணியிருந்தேன். அந்த மகத்தான தொல்பொருள் புதைபூமி இப்படி கைவிடப்பட்டு திறந்து கிடப்பதை எண்ணவே ஆச்சரியமாக இருந்தது. ஆதிச்சநல்லூர் தொல்பொருட்களை ஏன் பல்வேறு இடங்களிலாக பிரித்து வைக்கவேண்டும். அவை ஆய்வாளர்களுக்கு உரியவை, சரி. ஆனால் அவை மக்கள் பார்வைக்கும் உரியவை அல்லவா? அவை மாபெரும் குறியீடுகள் அல்லவா? ஒரு சமூகம் தன் வேர்களை உணரும் ஆன்மீகமான பேரனுபவத்தை அளிக்க வல்லவை அல்லவா? குறைந்தபட்சம் ஆதிச்சநல்லூரில் அந்த அரும்பொருட்கள் எங்கே உள்ளன என்றாவது ஒரு குறிப்பு இருக்கலாமே?
கிழவர் பேசிக்கொண்டே போனார். ”ஆரியன் திராவிடன் ஒண்ணும் கெடையாது. எல்லாம் இங்கேருந்து போனவங்க தான்… இதுதான் பூர்வீக நெலம். இந்த தாமிரவருணி மண்ணு… எத்தனை ஆயிரம் வருஷம் முன்னாடி… மொகஞ்சதாரோ ஹரப்பா எல்லாம் இங்கேருந்து போனவங்க உண்டுபண்ணின விஷயங்கள். இந்தியாவிலே உளல் எல்லா சிந்தனைகளும் இங்கேருந்து மேலே போனதுதான்…இதைச் சொல்ல இன்னைக்கு ஆளில்லை…” நான் சீண்டுவதற்காக ”ஆனா ஆதிச்சநல்லூர்னுதானே பேரு? ஆதித்தன்னா வடமொழியாச்சே” என்றேன்
”ஆதித்த நல்லூர்னு எவன் சொன்னான்?”என்று கிழவர் நின்றுவிட்டார். ”…இந்த ஊருக்குப்பேரு ஆதி எச்ச நல்லூர்…இது எத்தனையோ காலமா சுடுகாடா இருந்திருக்கு. இந்த எடம் சுடுகாடா ஆனதுக்கு அந்தக்காலத்திலே ஏதோ காரணம் இருந்திருக்கு…தேடிக்கொண்டுவந்து புதைச்சிருக்காங்க…ஏன்னு தெரியல்லை” கிழவர் கோபமானார் ”ஆதித்தன்னு பேரு வச்சுகிட்டவன் சோழன்…பாண்டியனுக்கு அந்தபேரு கெடையாது. ஏன்னா சோழர்கள் சுத்த தமிழர்களே கெடையாது. வெங்கிநாட்டுலேருந்து வந்தவனுங்க. ஆதித்தன்னு எங்க சொல்லியிருக்கு தமிழிலே? ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்னுதானே இளங்கோ சொல்றார்?”
நான் ”ஆதின்னாலும் வடமொழிதானே?”என்றேன். ”என்னய்யா? ஆதிங்கிற வடமொழிச்சொல்லுக்கு எங்க வேர் இருக்கு? சொல்லுங்கய்யா…ஆதிங்கிற சொல்லு சுத்தமான தமிழ்ச்சொல்லு. அதுங்கிற வேர்தான் ஆதியாகியிருக்கு. அதை வடமொழிக்காரன் எடுத்துகிட்டான். அவன் மொழியே முக்காவாசி சொற்களை அங்க இங்க இருந்து பொறுக்கி எடுத்துக்கிடுறதுதான்…” அதற்குமேல் நான் அவரிடம் பேச ஒன்றுமில்லை. அவர் சொன்னது உண்மை. ”நம்ம வரலாறுக்கு எத்தனையோ ஆழம் இருக்கு தம்பி …நீங்கள்லாம் படிச்சுப்பாக்கணும். சிலப்பதிகாரத்திலே சொல்லியிருக்கு ப·றுளி ஆறும் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள அப்டீன்னு…நம்ம வேரு எங்கியோ கெடக்கு”
கிழவர் ஒரு உடைந்த ஓட்டுக்குவியலைக் காட்டினார். ”இதெல்லாம் மண்பாண்டக்குவியல் உடைஞ்சது. சும்மா வந்துகிட்டே இருக்கு…” கறுப்பு ஓடுகள் சிவப்பு ஓடுகள் கறுப்பும் சிவப்பும் கலந்த ஓடுகள். மிக மெல்லியவை,ஆனால் மிக உறுதியானவை ”அந்தக்ககாலத்திலே இலுப்பை எண்ணையைப்போட்டு களிமண்ணை பெசைஞ்சு பானை வனைஞ்சாங்க. அந்த இலுப்பை எண்ணைதான் கறுப்பா ஆகியிருக்கு…”என்றார்.
ஆதிச்சநல்லூரின் மண்ணில் நின்று அந்த கலத்தூண்டுகளை எடுத்துப் பார்ப்பது மனக்கிளர்ச்சி ஊட்டும் அனுபவமாக இருந்தது. என்றோ ஒருநாள் ஆதிச்சநல்லூரின் பாடங்கள் மேலும் துல்லியமாகப் படிக்கப்படலாம். அப்போது நம் வரலாறு முழுமையுடன் மேலெழுந்து வரலாம். ”அப்ப நான் கெளம்புறேன்…”என்றார் கிழவர்
”அய்யா பேரு என்னங்க?” என்றேன் ”சிதம்பரம்…” என்றார். ”என்ன பண்றீங்க?”என்றான் யுவன் ”பாத்தா தெரியலை, மாடுமேய்க்கிரது. நமக்கு அந்தப்பக்கமா கொஞ்சம் நெலம் உண்டு. வெவசாயம். ஸ்கூலுக்குப் போகலை. அண்ணாவைத்தான் படிகக் வச்சாங்க. எல்லாம் நானே வாசிச்சு படிச்சுகிட்டதுதான்” ”இப்பவும் படிக்கிறீங்களா?”என்றார் கிருஷ்னன் ”நாளைக்கும் படிப்பேன்”என்றார் சிதம்பரம் ஆணித்தரமாக. ”அப்ப நான் வாரேன்” கும்பிட்டு கெளம்பினார்
”சார் தலையிலே கடப்பாரையாலே அடிச்சது மாதிரி இருந்தது”என்றார் கிருஷ்ணன் ”ஆனா எனக்கு ரொம்ப தேவையான அடிதான்” என்றார். யுவன் சந்திரசேகர் ”என்னய்யா இது கதையிலே இருந்து எந்திரிச்சு வாரதுமாதிரி வந்திட்டார்… சொன்னா நம்பவே மாட்டாங்க…”என்றார் .”அவரு நம்மளை ஒரு பொருட்டாகவே நெனைக்கலை பாத்தியா? அவருக்கு நம்ம கிட்ட பேசுறதிலே ஆர்வமே கெடையாது. நாம வழி கேட்டப்ப பேசாமத்தான் இருந்தார். கட்டாயப்படுத்தி தங்கமனி கூப்பிடப்பதான் வந்தார்…”
அங்கிருந்து திரும்பும்போது எண்ணிக்கொண்டேன் , ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் இன்னும் எத்தனையோ தொல்மூதாதையர் உறங்கிக்கொண்டிருக்கலாம். நம் ஞானம் இன்னும் சென்று தீண்டாத ஆழத்தில். சிதம்பரம் வாயிலிருந்துகோண்டு அவர்கள்தான் பேசியிருக்கிறார்கள்.
Source: http://www.jeyamohan.in/?p=2143